தைப்பே: தைவான், திங்கட்கிழமையன்று (டிசம்பர் 9) அதன் விழிப்புநிலையை உயர்த்தியது.
சீனா, தனக்கென ஏழு ஆகாய வட்டாரங்களை ஒதுக்கிக் கொண்டுள்ளதாகவும் கடற்படைகள், கடலோரக் காவல் படைகளைச் செயல்படுத்தியுருப்பதாகவும் தைவானிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தைவான் விழிப்புநிலையை உயர்த்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வட்டார நீர்ப்பகுதியின் பெரும்பகுதியில் சீனா ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாகக் கருதப்படுகிறது.
தைவான், தென் ஜப்பானியத் தீவுகள், கிழக்குச் சீனக் கடல், தென்சீனக் கடல் ஆகியவற்றுக்கு அருகே உள்ள நீர்ப் பகுதிகளில் சீனா கிட்டத்தட்ட 90 போர்க்கப்பல்களையும் கடலோரக் காவல்படைக் கப்பல்களையும் பணியில் ஈடுபடுத்தியிருப்பதாக மூத்த தைவானியப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அக்கப்பல்களில் மூன்றில் இரு பங்கு சீனக் கடற்படைக் கப்பல்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராய்ட்டர்ஸ் எழுப்பிய கேள்விகளுக்கு சீன தற்காப்பு அமைப்பு கருத்து தெரிவிக்கவில்லை.
தைவானிய அதிபர் லாய் சிங்-தெ ஹவாயி, குவாம் போன்றவற்றை உள்ளடக்கிய பசிபிக் வட்டாரத்துக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்குப் பதிலடியாக சீனா மீண்டும் ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் ராய்ட்டர்சிடம் தெரிவித்தனர்.
தயார்நிலையில் இருக்க முக்கியமான இடங்களில் தங்கள் போர்க்காலப் பயிற்சிகளைச் செயல்படுத்தியிருப்பதாக தைவானிய ராணுவம் குறிப்பிட்டது. மேலும், தங்களின் கடற்படை, கடலோராக் காவல்படைப் படகுகள் ஆகியவை சீனாவின் ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் அது சொன்னது.