தைப்பே: ஜப்பான் வசமிருந்த தைவான் மீண்டும் சீன ஆட்சியிடம் ஒப்படைக்கப்பட்டதன் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தைப் பயன்படுத்தி அறிவுசார் போரைத் தொடங்க சீனா முயல்வதாக தைவான் தெரிவித்துள்ளது.
ஆண்டு நிறைவு நாளில் பெய்ஜிங் தைப்பே நகரத்தின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் ராணுவப் பிரசாரச் சுவரொட்டியை வெளியிட்டதைத் தொடர்ந்து, தைவானின் தற்காப்பு அமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார்.
1895ஆம் ஆண்டில் சீனாவின் சிங் வம்சத்திடமிருந்து தைவானை ஜப்பான் கைப்பற்றி, 1945 வரை ஆட்சி செய்தது. பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் அந்தத் தீவை சீனக் குடியரசு அரசிடம் அது ஒப்படைத்தது.
தற்போது 81வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள இந்த நிகழ்வை பெய்ஜிங், தைப்பே ஆகிய இரண்டு தரப்புமே நினைவுகூர்கின்றன.
இந்த ஒப்படைப்பின் ஆண்டு நிறைவு நாளான அக்டோபர் 25ஆம் தேதி, தைப்பே ரயில் நிலையம் மற்றும் தேசிய அரண்மனை அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை சீனா வெளியிட்டது.
கம்யூனிஸ்டுகளிடம் உள்நாட்டுப் போரில் தோற்று 1949ஆம் ஆண்டில் தைவானுக்குத் தப்பிச் சென்றபோது சீனக் குடியாட்சி கொண்டு வந்த ஏராளமான அரிய பொக்கிஷங்கள் அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களின் படங்களின் மேல் தைவான் வரைபடம் பொருத்தப்பட்ட ஒரு சுவரொட்டியை ‘மீட்பின் வரலாற்றை நினைவில் கொள்க’ என்ற தலைப்புடன் சீன ராணுவத்தின் கிழக்கு தளபத்தியம் வெளியிட்டது.
