தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வேறு நாட்டினருக்குச் சொந்தமான கப்பல்களின் சோதனையை முடுக்கிவிடும் தைவான்

2 mins read
c78f532a-8767-490a-afc2-003e623fdc41
கெமரூன், டான்ஸேனியா இரண்டிலும் பதிவுசெய்யப்பட்ட, ஹாங்காங் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான இக்கப்பல் கடலடிக் கம்பிகளை சேதப்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பு

தைப்பே: ஒரு நாட்டில் பதிவுசெய்யப்பட்டு வேறு நாட்டில் வசிக்கும் அல்லது அதன் குடியுரிமையை வைத்திருக்கும் உரிமையாளர்களுக்குச் சொந்தமான கப்பல்களைச் சோதனையிடுவதையும் அவற்றைக் கையாளும் முறைகளையும் தைவான் முடுக்கிவிடவிருக்கிறது.

சீனாவுடன் தொடர்புடைய சரக்குக் கப்பல் ஒன்று கடலடியில் இருக்கும் தொடர்புக் கம்பியை சேதப்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக தைவான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கெமரூன், தான்சானியா ஆகிய இரு நாடுகளிலும் பதிவுசெய்யப்பட்ட, ஹாங்காங் நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான அக்கப்பல் இம்மாதத் தொடக்கத்தில் தைவானுக்கு வடக்கே இருக்கும் கடலடிப் பகுதியில் தொடர்புக் கம்பியைச் சேதப்படுத்தியதாக தைவான் தெரிவித்தது. ஆனால், அக்கப்பலிடம் இருந்திருக்கக்கூடிய நோக்கங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை என்று தைவான் கூறியது. மேலும், மோசமான வானிலை காரணமாக அதில் நுழைய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தில் தனக்குப் பங்கிருந்ததாகக் கூறப்படுவதை சம்பந்தப்பட்ட கப்பலின் உரிமையாளர் மறுத்துள்ளார். தகவல்கள் தெளிவாகத் தெரிவதற்கு முன்னரே தைவான் குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக சீன அரசாங்கம் குறைகூறுகிறது.

சீனா, தன்னுடன் நேரடியாக மோதாமல் தீவைச் சுற்றி தொந்தரவு இழைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தைவான் தொடர்ந்து குறைகூறி வந்துள்ளது. அதனால், இச்சம்பவம் தைவானைப் பெரிதும் ஆத்திரப்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை (ஜனவரி 16) நடைபெறவுள்ள தைவானிய நாடாளுமன்ற அமர்வை முன்னிட்டு ஒரு நாட்டில் பதிவுசெய்யப்பட்டு வேறு நாட்டு உரிமையாளர்களுக்குச் சொந்தமான கப்பல்களைச் சோதனையிடுவதையும் கண்காணிப்பதையும் முடுக்கிவிடப்போவதாக தைவானியப் பாதுகாப்புப் பிரிவு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிக்கை மூலம் தெரிவித்தது. அதன்படி, முன்பு தவறான தகவல்களை வெளியிட்டதாக அடையாளம் காணப்படும் அத்தகைய கப்பல்கள், சோதனைக்கு முன்னுரிமை தரவேண்டிய கப்பல்களுக்கான பட்டியலில் சேர்க்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அக்கப்பல்கள், கடலடிக் கம்பிகள் இருக்கும் பகுதியில், தைவான் கடற்பகுதிகளுக்குக் குறிப்பிட்ட தூரத்திற்குள் காணப்பட்டால் தைவான் கடலோரக் காவல்படை அவற்றில் ஏறி விசாரணை நடத்தும் என்றும் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்