காபூல்: ஆப்கானிஸ்தான் குடியேறிகள் பலரைத் தங்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பும் நோக்கத்துடன், அவர்களை முதற்கட்டமாகப் பாகிஸ்தானுக்கு நாடுகடத்த வாஷிங்டன் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அதிகாரிகள் திங்கட்கிழமை (நவம்பர் 2) கவலை தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள 150க்கும் மேற்பட்ட ஆப்கானியர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தப்படவுள்ளனர் என்று அமெரிக்க ஊடகச் செய்திகளும் ஆதரவுக் குழு ஒன்றும் தெரிவித்துள்ளன.
கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கு முன்பாக அவர்களுக்கு உதவியவர்களின் உறவினர்களும் அவர்களில் அடங்குவர் என்றும் அவை கூறின.
“அமெரிக்காவில் இதுவரை சட்டபூர்வக் குடியிருப்பு ஆவணங்களைப் பெற இயலாத ஆப்கானிய அகதிகள் சிலரைப் பாகிஸ்தானுக்கு நாடுகடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து ஆப்கானிஸ்தான் மிகுந்த கவலை கொள்கிறது,” என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அப்துல் கஹார் பால்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அகதிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் அவ்வாறு வெளியேற்றுவது அவர்களது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடும் என்று ஆதரவுக் குழுக்கள் எச்சரித்துள்ளன.
அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றிய பிறகு, மேற்கத்திய ஆதரவுப் படைகளுடனும் அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களுக்கு தலிபான் அதிகாரிகள் பொதுமன்னிப்பை அறிவித்திருந்தனர்.
அதோடு, தங்களின் முன்னாள் எதிரிகள் பாதுகாப்பாகத் தாயகம் திரும்பலாம் என்ற உறுதிமொழியையும் இவ்வாண்டு அவர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
இருப்பினும், சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், தடுப்புக்காவலில் வைத்தல், துன்புறுத்தல்கள் தொடர்பான அறிக்கைகளை ஐக்கிய நாட்டு நிறுவனம் பதிவு செய்துள்ளது.
