தரமற்ற மருந்து, மாத்திரைகளைக் கண்டறிவதில் தமிழகம் முதலிடம்

தரமற்ற மருந்து, மாத்திரைகளைக் கண்டறிவதில் தமிழகம் முதலிடம்

படம்: தினமணி

22 Oct 2026 - 6:03 pm

2 mins read

புதுடெல்லி: இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்ட தரமற்ற மருந்து, மாத்திரை வகைகளில் 45 விழுக்காடு தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கண்டறியப்பட்டதாக இந்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை உறுதிசெய்ய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அவ்வப்போது தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, மருந்துக்கடைகள், கிடங்குகள், விநியோகக் கூடங்கள் போன்ற இடங்களில் மருந்து மாத்திரைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பிறகு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.

அத்துடன், மாநிலச் சுகாதார அமைச்சுகளும் மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அச்சோதனைகளில் கண்டறியப்படும் தரமற்ற மருந்து வகைகளின் விவரங்கள் மாதந்தோறும் மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. மத்திய அந்த விவரங்களை பொதுமக்களின் பார்வைக்கு இணையத்தில் வெளியிடுகிறது.

அந்த வரிசையில் புகழ்பெற்ற நிறுவனங்கள் தயாரித்த ‘ஆன்டிபயாட்டிக்’ எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள், உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் போன்றவற்றின் தரத்தில் குறைபாடு உள்ளதென ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டது.

ஏறத்தாழ 220 வகை மருந்துகளின் தரத்தில் குறைபாடு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவற்றில் 45 விழுக்காடு (100 மருந்துகள்) தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் உத்தரப் பிரதேசத்திலும் தலா 38 வகை மருந்துகளும் கர்நாடகத்தில் 24 வகை மருந்துகளும் தரமற்றவையாக வகைப்படுத்தப்பட்டன.

மாநில அளவில் தமிழக மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீவிரமாகச் சோதனை நடத்தியதன் விளைவாக தரம் குறைந்த பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆய்வுகளை ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்தும்போது அதிக எண்ணிக்கையில் தரம் குறைன்ட்ஹ மருந்து மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

குறிப்புச் சொற்கள்