பெட்டாலிங் ஜெயா: சாலை விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் விலங்குகளில் மலாயன் டாபிர் முதலிடத்தில் இருப்பதாக மலேசியாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை தெரிவித்து உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டு காலத்தில் 112 மலாயன் டாபிர் என்னும் அரிய விலங்குகள் சாலை விபத்துகளில் மடிந்துவிட்டதாக அது கூறியுள்ளது.
வாகனங்களால் மோதப்பட்டு சாலை விபத்துகளில் பலியாகும் விலங்குகளில் மலாயன் டாபிருக்கு அடுத்த நிலையில் சூரியக் கரடிகளும் கருஞ்சிறுத்தைகளும் உள்ளன.
ஐந்தாண்டுகளில் ஒன்பது சூரியக் கரடிகளும் அதே எண்ணிக்கையிலான கருஞ்சிறுத்தைகளும் விபத்துகளில் உயிரிழந்துவிட்டதாக அந்தத் துறை பட்டியல் இட்டுள்ளது.
விபத்தில் மாண்ட வனவிலங்குகளின் பட்டியலில் மூன்றாவதாக ஆசிய யானைகள் உள்ளன. ஐந்தாண்டு காலத்தில் ஆறு யானைகள் சாலை விபத்துகளில் உயிரிழந்தன.
நான்காவது இடத்தில் மலாயன் புலிகள் உள்ளன. 2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை நான்கு புலிகள் விபத்தில் சிக்கி மாண்டன.
மலாயன் டாபிர், சூரியக் கரடி, கருஞ்சிறுத்தை, ஆசிய யானை, மலாயன் புலி ஆகிய ஐந்து பெரிய வனவிலங்குகளும் மலேசியாவில் ஆபத்தான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன.
“காடுகள் அழிக்கப்படுவதாலும் நிலத்தின் பயன்பாடு மாறுவதாலும் வனவிலங்குகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. அவற்றின் வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால் வெவ்வேறு இடத்தை நோக்கிச் செல்லும்போது விபத்தில் சிக்குகின்றன,” என்று வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காத் துறை குறிப்பிட்டு உள்ளது.