வாஷிங்டன்: சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக் சமூக ஊடகத் தளத்தை விற்க முன்வந்தால் சீனா மீதான வரி விதிப்பைக் குறைக்க தயார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பைட்டான்ஸ் நிறுவனம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்கவேண்டும். அப்படி செய்யாவிட்டால் தேசியப் பாதுகாப்பு கருதி 170 மில்லியன் அமெரிக்கர்கள் பயன்படுத்தும் அந்தத் தளம் அமெரிக்காவில் தடை செய்யப்படும்.
பைட்டான்ஸ் நிறுவனத்துக்கும் சீன அரசாங்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் டிக்டாக் மூலம் அமெரிக்கர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அமெரிக்கா இதற்குமுன் சொன்னது.
அதோடு அமெரிக்கர்களின் விவரங்களை டிக்டாக் வழி சீனா சேகரிக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டது.
டிக்டாக் நிறுவனத்துடன் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஏப்ரல் காலக்கெடுவை ஒத்திவைக்கவும் தயாராயிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
டிக்டாக் இதுகுறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை.
டிக்டாக் சமூக ஊடகத்தைக் கைப்பற்ற திரு டிரம்ப் வரியை ஒரு உத்தியாகப் பயன்படுத்திவருகிறார். இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றவுடன் அமெரிக்காவுக்கும் டிக்டாக்குக்கும் இடையிலான ஒப்பந்தத்தை சீனா ஏற்க மறுத்தால் அதன்மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் எச்சரித்தார்.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் டிக்டாக்கைத் தடை செய்ததை அடுத்து இவ்வாண்டு ஜனவரியில் செயலி தற்காலிகமாக அமெரிக்காவில் செயல்படவில்லை.
தொடர்புடைய செய்திகள்
திரு டிரம்ப் அதிபரான பிறகு மீண்டும் அது அமெரிக்காவில் செயல்படத் தொடங்கியது.
சட்ட அமலாக்கத்தை ஏப்ரல் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அதிபர் விரைவாக ஒரு நிர்வாக உத்தரவைப் பிறப்பித்தார். மேலும் பிப்ரவரியில் ஓர் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு தனக்கு அவகாசம் அளிக்க அந்த காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியும் என்று கூறினார்.
நெருக்கமாகக் கவனிக்கப்பட்ட ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் வெள்ளை மாளிகை முன்னோடியில்லாத அளவில் ஈடுபட்டுள்ளது என்றும் முதலீட்டு வங்கி என்ற அதன் பங்களிப்பைத் திறம்பட வகிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.
டிக்டாக்மீது தடை விதிப்பது வெளிநாட்டு ஊடகங்களை அமெரிக்கர்கள் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதாக பேச்சுச் சுதந்திரத்தை ஆதரிப்போர் தெரிவித்தனர்.