கோலாலம்பூர்: மலேசியாவின் உள்நாட்டு வருவாய் வாரியத்தின் 5 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான கூடுதல் வரி நிலுவைக் கோரிக்கையை எதிர்த்து முக்ரிஸ் மகாதீர் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வருமான வரிச் சட்டத்தின்கீழ் சிறப்பு வருமான வரி ஆணையர்கள் முன்னிலையில்தான் இப்பிரச்சினைகள் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். மனுவை அனுமதிக்க எவ்விதச் சிறப்புச் சூழலும் இல்லை எனவும் அவர் கூறினார்.
இந்த முடிவு நடைமுறைச் சிக்கல் தொடர்பானது மட்டுமே என்றும் வரி விதிப்புக்கு எதிரான திரு முக்ரிசின் சவாலை நீதிமன்றம் ஆராயவில்லை என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.
வழக்கின் தகுதிகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால் அடுத்த கட்டங்களில் தரப்பினர் மீண்டும் வாதிடலாம் என அவர் கூறினார்.
உள்நாட்டு வருவாய் வாரியத்திற்கு 5,000 ரிங்கிட் வழக்குச் செலவாகத் திரு முக்ரிஸ் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் தேதி முக்ரிஸ் இந்த மனுவைத் தாக்கல் செய்தார். உள்நாட்டு வருவாய் வாரிய தலைமை இயக்குநர், நிதி அமைச்சர் அன்வார் இப்ராகிம், மலேசிய அரசாங்கம் ஆகியோரை அவர் எதிர்மனுதாரர்களாகக் குறிப்பிட்டிருந்தார்.
பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு திரு அன்வாரும் அரசாங்கமும் வழக்கிலிருந்து நீக்கப்பட்டனர்.
2017ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட 5 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி அறிவிப்புகளை ரத்து செய்யுமாறு 61 வயதான திரு முக்ரிஸ் கோரியிருந்தார்.
வருமான வரிச் சட்டத்தின் 113(2) பிரிவின்கீழ் தமக்கு விதிக்கப்பட்ட அபராதம் செல்லாது என அறிவிக்கவும் அவர் கேட்டிருந்தார்.
