வாஷிங்டன்: கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளின்மீது விதிக்கப்படும் 25 விழுக்காடு வரி மார்ச் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அதே நாளில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்குக் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளிகளான கனடா மற்றும் மெக்சிகோமீது புதிய வரிகளை விதிக்கப்போவதாகத் திரு டிரம்ப் அறிவித்தார்.
அந்நாடுகளின் தலைவர்கள் புதிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து கூடுதல் வரி விதிப்பைத் தற்காலிகமாக ஒரு மாதத்திற்கு நிறுத்திவைப்பதாக பிப்ரவரி 3ஆம் தேதி அவர் கூறினார்.
அக்காலம் முடிவடைந்த பிறகு அவை அமலுக்கு வருமா போன்ற கேள்விகள் உலகளவில் எழுந்தன.
வடஅமெரிக்க நாடுகளிலிருந்து பெருமளவு ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் போதைப்பொருள்கள் அமெரிக்காவுக்குள் கொண்டுவரப்படுவதாகத் தனது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் பிப்ரவரி 27ஆம் தேதி திரு டிரம்ப் தெரிவித்தார்.
“அமெரிக்காவிற்குத் தீங்கு விளைவிப்பதை நாம் தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவே, அது நிறுத்தப்படும் வரை அல்லது தீவிரமாகக் கட்டுப்படுத்தப்படும் வரை முன்மொழியப்பட்ட கூடுதல் வரி நடவடிக்கை திட்டமிட்டபடி மார்ச் 4 ஆம் தேதி அமலுக்கு வரும்,” என்றும் அப்பதிவில் குறிப்பிட்டார்.
மேலும், அதே நாளில் சீனாவிற்கும் கூடுதலாக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்றார் அவர்.