தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா மீதான வரி தொடர்ந்து உயர்த்தப்படும்: டிரம்ப்

2 mins read
3457fb96-d11e-4a4b-9086-9baeb2060933
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்

நியூயார்க்: இந்தியா மீதான இறக்குமதி வரி தொடர்ந்து உயர்த்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ர‌ஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை நிறுத்த அதிபர் டிரம்ப் இந்த உத்தியைக் கையாள்வதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

“இந்தியா ர‌ஷ்யாவிடமிருந்து பெரிய அளவில் எண்ணெய் வாங்குவது மட்டுமில்லாமல் அதை வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து நல்ல லாபத்தை ஈட்டியுள்ளது,” என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகப் பதிவுமூலம் தெரிவித்துள்ளார்.

“உக்ரேனில் ர‌‌ஷ்யாவின் தாக்குதலால் எத்தனை மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்பது பற்றி இந்தியா கவலைப்படுவதில்லை. அதனால், இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரி தொடர்ந்து உயர்த்தப்படும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

திரு டிரம்ப் இந்தியாவுக்கு எத்தனை விழுக்காடு வரி உயர்த்தப்போகிறார் என்பது குறித்துப் பதிவிடவில்லை.

அண்மையில் இந்தியப் பொருள்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 25 விழுக்காடாக நிர்ணயித்தது டிரம்ப் நிர்வாகம்.

பல மாதங்களாக இந்திய உயர் அதிகாரிகள் அமெரிக்காவிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியைத் தழுவியது. இது இந்திய அரசாங்கத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ர‌ஷ்யா ஆகஸ்ட் 8ஆம் தேதிக்குள் உக்ரேனுடன் சண்டை நிறுத்த உடன்பாட்டை எட்ட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு வரிவிதிப்பு நெருக்கடியை அதிகரித்துள்ளார்.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் அதன் குடிமக்களை உள்ளூர் தயாரிப்புகளை வாங்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அது ர‌ஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாது என்றும் நம்பப்படுகிறது.

“இந்தியாமீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் நியாயமற்றது, காரணமில்லாதது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியா தனது குடிமக்களுக்கு நிலையான, கட்டுப்படியான விலையில் எரிபொருள்களை இறக்குமதி செய்கிறது என்றும் அது குறிப்பிட்டது.

உக்ரேன்மீது ர‌ஷ்யா 2022ஆம் ஆண்டு படை எடுத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட இந்தியா ர‌ஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எண்ணெய் வாங்கத் தொடங்கியது.

நாள் ஒன்றுக்குச் சராசரியாக இந்தியா ர‌ஷ்யாவிடமிருந்து 1.7 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வாங்குவதாகக் கூறப்படுகிறது.

அதேபோல் இந்தியா நாளொன்றுக்குச் சராசரியாக 1.4 மில்லியன் பீப்பாய் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்