பிரசல்ஸ்: கிரீன்லாந்தைத் தன்வசப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது.
இதை எதிர்க்கும் வகையில் செயல்படும் எட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக 10 விழுக்காடு வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதை எதிர்கொள்ளவும் அமெரிக்காவுக்கு எதிராகப் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளவும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அடுத்த சில நாள்களில் அவசரகாலக் கூட்டம் ஒன்றை நடத்தவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசீலிக்கப்படும் பதிலடி நடவடிக்கைகளில் அமெரிக்கப் பொருள்கள் மீது 93 பில்லியன் பவுண்டு ($139 பில்லியன்) வரி விதிப்பதும் அடங்கும்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 19) மாலை ஐரோப்பிய ஒன்றியத் தூதர்கள் பெல்ஜியத் தலைநகர் பிரசல்சில் சந்தித்துப் பேசினர்.
கிரீன்லாந்துக்கும் டென்மார்க்கிற்கும் தொடர்ந்து ஒன்றிணைந்து ஆதரவு வழங்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவெடுத்திருப்பதாக கலந்துரையாடலுக்குப் பிறகு ஐரோப்பிய மன்றத் தலைவர் அண்டோனியோ கோஸ்டா சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.
அதிபர் டிரம்ப்பின் புதிய வரிகள் ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாட்டுக்குப் பொருந்தாது என்று அவர் கூறினார்.
கட்டாயப்படுத்தும், மிரட்டல் விடுக்கும் அணுகுமுறைக்கு எதிரான உத்தியைப் பயன்படுத்துவது குறித்தும் ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த உத்தியைப் பயன்படுத்துவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் தெரிவித்தார்.
இதற்கு முன்பு இந்த உத்தியைப் பயன்படுத்த பிரான்ஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால் பதிலடி கொடுக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் மிரட்டியதை அடுத்து, அத்திட்டத்தை அது கைவிட்டது.
அமெரிக்கப் பொருள்களுக்கு 93 பில்லியன் பவுண்டு பதிலடி வரி விதிப்பதற்கு 2025ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் வழங்கியது. ஆனால், அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் வர்த்தக உடன்பாட்டை எட்டியதும் அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, வரி விதிப்பது குறித்து அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கும் போதிலும் கிரீன்லாந்துக்கு ஆதரவாகத் தனது ராணுவப் படைகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்து கனடா பரிசீலித்து வருகிறது.
கிரீன்லாந்தில் நேட்டோ படையினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபடுவது குறித்து கனடா திட்டமிட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்து கனடா பிரதமர் மார்க் கார்னி இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

