லண்டன்: பிரிட்டனின் முக்கிய விமானப் போக்குவரத்து மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் மற்றும் பிற விமான நிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் பயணிகள் தொடர்ச்சியாக இரண்டாம் நாளாகக் கடும் பயண இடையூறுகளை எதிர்கொண்டனர்.
செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (செப்டம்பர் 8, செப்டம்பர் 9) ஆகிய நாள்களில் ஏறத்தாழ 550 விமானச் சேவைகளை ரத்து செய்ததாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
இதனால் 85,000க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டனர். பிரிட்டனின் முதன்மை விமான நிறுவனமான பிரிட்டிஷ் ஏர்வேஸ், தனது முதன்மை மையமான ஹீத்ரோவிலிருந்து அதிக அளவிலான நெடுந்தூர விமானச் சேவைகளை இயக்குகிறது.
இதன் காரணமாக, அதன் விமானங்கள் தொலைதூர இடங்களில் முடங்கியுள்ளதால், செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்ப அதிக நேரம் எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9ஆம் தேதி மட்டும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் ஏறத்தாழ 200 விமானச் சேவைகளை ரத்து செய்தது. அதே வேளையில் மலிவுக் கட்டண விமான நிறுவனமான ராயன் ஏர் செப்டம்பர் 9ஆம் தேதியன்று எந்தவொரு விமானத்தையும் ரத்து செய்யவில்லை. ஈசிஜெட், விஸ் ஏர், வர்ஜின் அட்லாண்டிக் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் தலா கிட்டத்தட்ட 30 விமானச் சேவைகளை மட்டுமே ரத்து செய்திருந்தன. வர்ஜின் நிறுவனமும் ஹீத்ரோவிலிருந்து நெடுந்தூர சேவைகளை இயக்கினாலும், அதன் விமானங்களின் எண்ணிக்கை பிரிட்டிஷ் ஏர்வேசைவிட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

