தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் மின்னுற்பத்தி ஆலைகளை அமைக்கவேண்டும்: டிரம்ப்

தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் மின்னுற்பத்தி ஆலைகளை அமைக்கவேண்டும்: டிரம்ப்

1 mins read
c6b46d46-0848-4890-a75a-34ab1aed7a85
அமெரிக்கா முழுவதும் உள்ள தரவு நிலையங்களுக்கு அதிகமாக எரிசக்தி தேவைப்படுவது தொடர்பில் உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.  - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தொழில்நுட்பப் பெருநிறுவனங்கள் அவற்றின் தரவு நிலையங்களுக்காகச் சொந்தமாக மின்னுற்பத்தி ஆலைகளை அமைத்துக்கொள்வது கட்டாயம் என்று தமது நிர்வாகம் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மின்கட்டண அதிகரிப்பிலிருந்து பயனாளர்களைப் பாதுகாக்க இந்த நடவடிக்கை உதவும் என்றார் அவர்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அமெரிக்கா முழுவதும் உள்ள தரவு நிலையங்களுக்கு அதிகமாக எரிசக்தி தேவைப்படுவது தொடர்பில் உள்நாட்டில் எதிர்ப்பு அதிகரிக்கும் நிலையில் அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பு வெளிவந்துள்ளது. தரவு நிலையங்களுக்கு அதிக எரிசக்தி தேவைப்படுவதால்தான் மின்கட்டணம் வெகுவாக உயர்ந்துள்ளது என்று கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

இருப்பினும், எந்தெந்தப் பெருநிறுவனங்கள் மின்னுற்பத்தி ஆலைகள் அமைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்ற விவரங்களைத் திரு டிரம்ப் வெளியிடவில்லை. அந்தத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் அல்லது அமலாக்கப்படும் என்பது குறித்தும் அவர் குறிப்பிடவில்லை.

மார்ச் மாதத் தொடக்கத்தில் வெள்ளை மாளிகை சில பெருநிறுவனங்களை அழைத்து இதுகுறித்துக் கலந்துரையாடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.

முன்னதாக, ‘ஆந்த்ரோபிக்’, ‘மைக்ரோசாஃப்ட்’ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் எரிசக்திக் கட்டணத்தில் தரவு நிலையங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட விரும்புவதாகத் தாங்களாகவே முன்வந்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஅதிபர்டோனல்ட் டிரம்ப்மின்சாரம்தொழில்நுட்பம்நிறுவனம்உற்பத்தி