தொழில்நுட்பத் துணுக்குகள் [26/11/2026]

தொழில்நுட்பத் துணுக்குகள் [26/11/2026]

படம்: ராய்ட்டர்ஸ்

26 Nov 2026 - 6:30 am

2 mins read

பங்குச் சந்தையில் ஆந்த்ரோபிக்

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவுப் பொதுப் பங்கு வெளியீட்டை ஆந்த்ரோபிக் நிறுவனம் நிறைவு செய்துள்ளது. அமெரிக்கப் பங்குச் சந்தையில் நவம்பர் 19ஆம் தேதி முதல் அதன் பங்குகள் விற்பனைக்கு வந்தன. அந்நிறுவனத்தின் மதிப்பு இப்போது 1 டிரில்லியன் டாலருக்குமேல் பதிவாகியுள்ளது.

மீண்டும் ஜென்சன் ஹுவாங்

என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பதவியிலிருந்து விலகிய இரண்டு வாரங்களுக்குள் அவர் மீண்டும் என்விடியா தலைமையகத்திற்குத் திரும்பினார்.

நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் ஹுவாங் விரைவாக மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பது பங்குச் சந்தைகள், செயற்கை நுண்ணறிவுத் துறை, புவிசார் அரசியல் ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள செல்வாக்கைக் காட்டுகிறது.

சான் ஃபிரான்சிஸ்கோவில் அச்சம்

2023ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை அமெரிக்காவில்  செய்யப்பட்ட தொழில்நுட்ப முதலீட்டில் 60 விழுக்காடு சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் செயல்படும் நிறுவனங்களுக்கே சென்றது. 

ஆனால், செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பங்குகளும் முதலீடுகளும் சரிந்தால் என்ன ஆவது என்ற அச்சம் இப்போது சான் ஃபிரான்சிஸ்கோ மக்கள் இடையே நிலவுகிறது. மேலும் ஆட்குறைப்பு அதிகமாகும் என்ற பயமும் அவர்களிடம் அதிகரித்துள்ளது.

‘ஓப்பன்ஏஐ’ புதிய பரிந்துரை

செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சிக்குப் பொதுவான வரம்புகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஓப்பன்ஏஐ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜக்கு பச்சோக்கி தெரிவித்துள்ளார்.

தொழில்துறை முழுவதும் செயற்கை நுண்ணறிவின் முன்னேற்றத்தை அளவிட ‘பெர்ப்ளெக்சிட்டி’ (perplexity) அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். திரு பச்சோக்கியின் ஆலோசனைக்கு ஓப்பன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனும் ஆதரவளித்துள்ளார்.

விதிமீறினால் பெருந்தொகை அபராதம்

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம், அடிமையாக்கும் அம்சங்களை அகற்றத் தவறினால், கூகல், மெட்டா உள்ளிட்ட இணைய நிறுவனங்களின் உலகளாவிய வருவாயில் ஐந்து விழுக்காடு வரை அபராதமாக விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.

ஆட்குறைப்பு: கூகல் விளக்கம்

கூகல் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவிலான ஆட்குறைப்பு, அடுத்த ஆண்டில் வேலைக்கு ஆட்சேர்ப்பு நிறுத்தப்படும் என்பன போன்ற தகவல்களை மறுத்துள்ளது. சிறிய அளவிலான நிறுவன மாற்றத்தின் ஒரு பகுதியாக, கடந்த வாரம் தனது இந்திய ‘கிளவுட்’ பிரிவில் ஊழியர்கள் கிட்டத்தட்ட 30 பேர் நீக்கப்பட்டதாக அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப உலகில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 241,000 பேர் ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்