கேன்பெரா: உலகிலேயே 16 வயதுக்குக் கீழ் உள்ள பதின்ம வயதினருக்கும் சிறாருக்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுத் தடையை விதித்த முதல் நாடு ஆஸ்திரேலியா.
அரசாங்கம் விமர்சிக்கப்படுவதன் தொடர்பில் அத்தடை தீவிரமற்ற, நடுநிலையான, நியாயமான நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் புதன்கிழமை (நவம்பர் 4) நீதிமன்றத்தில் கூறினார். தடைக்கு எதிராக ரெடிட் தளம் தொடுத்துள்ள வழக்கை அவர் நிராகரித்துள்ளார்.
இளையர்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்துக்கொள்ளத் தடை
16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் பெரிய சமூக ஊடகத் தளங்களில் கணக்குகளை வைத்திருக்க அனுமதிப்பதை ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட ஓராண்டுக்கு முன்பு தடை செய்தது. அச்சட்டத்தைச் செல்லாது என்று தீர்ப்பளிக்குமாறு ரெடிட் தளமும் தனிமனிதச் சுதந்திரத்துக்குக் குரல் கொடுக்கும் குழு ஒன்றும் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தன. அந்தத் தடை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்பது அவற்றின் வாதம்.
தாங்கள் விதித்த சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் தற்காத்துப் பேசிவருகிறது. தீங்கு ஏற்படுவதைக் குறைக்க தடை முக்கியம் என்று அது கூறுகிறது.
இவ்வழக்கில் பிரதிவாதத் தரப்பு வெற்றிபெற்றால் அது ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு மட்டுமின்றி இந்த விவகாரத்தில் அதைப் போலவே நடவடிக்கைகளை எடுத்த மற்ற உலக நாடுகளுக்கும் பின்னடைவாக விளங்கக்கூடும். மின்னிலக்க யுகத்தில் சிறாரை உடல்ரீதியாகவும் மனநலரீதியாகவும் பாதுகாக்க உலக அளவில் பல நாடுகள் சமூக ஊடகத் தடைகளை விதித்துவருகின்றன.
அரசாங்கத் தரப்பின் வாதம்
இளையர்களை சமூக ஊடகங்களைப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ள எடுக்கப்படும் இந்நடவடிக்கை அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் பறிக்கிறது என்றும் அவ்விரு அம்சங்களுக்கும் சமமற்ற முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றும் ரெடிட் தளத்தின் வழக்கறிஞர் வாதிட்டார். அதற்குப் பதிலளித்த அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் ஸ்டீஃபன் லோய்ட், நன்மைகளைக் கருத்தில்கொள்ளும்போது தடை ஒரு தீவிரமற்ற நடவடிக்கை என்று கூறினார்.
இதனால் ஏற்படும் சுமை நேரடியான தாக்கத்தை உருவாக்காத, தீவிரமற்ற நடவடிக்கை என்று அவர் நீதிமன்ற விசாரணையின் இரண்டாம் நாளான புதன்கிழமை ஏழு நீதிபதிகளைக் கொண்ட குழுவிடம் விவரித்தார். தடை, சமூக ஊடகங்களில் சிறார் பதிவுகளைப் பகிரவும் பெற்றுக்கொள்ளவும் தடுக்கும் அதேவேளை, அவர்களால் கணக்குகளை வைத்துக்கொள்ளாமலேயே சில பதிவுகளைப் பார்க்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
