பேங்காக்: டிக்டாக் தளத்தில் பார்வைகளை அதிகரிக்க வசிப்பிடமில்லா ஆடவருக்கு சிறுவர்கள் மூவர் தீவைத்தனர். இந்தக் கொடூரச் செயல் தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் உள்ள ஒரு பாலத்துக்கு அடியில் நிகழ்ந்தது.
ஆடவருக்குத் தீவைத்ததாகச் சந்தேகிக்கப்படும் மூன்று சிறுவர்களைத் தாய்லாந்துக் காவல்துறை அடையாளம் கண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் 9 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சிறுவர்கள் தீவைத்ததில் 51 வயது திரு கார்ன் காயமடைந்தார்.
ஆனால் அவர் உயிர்தப்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர் வயிற்றுப் பிழைப்புக்காக மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களைச் சேகரித்து விற்பவர்.
பேங்காக்கில் பிராவெட் மாவட்டத்தில் உள்ள பான் மா பாலத்துக்கு அடியில் அவர் தூங்குவது வழக்கம்.
தாம் தூங்கிக்கொண்டிருந்தபோது தம்மீது குளிர்ந்த திரவம் ஊற்றப்பட்டதை உணர்ந்ததாகத் திரு கார்ன், காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிறிது நேரத்தில் தமது உடல் தீப்பற்றி எரிந்ததாக அவர் கூறினார்.
தமக்குத் தீவைத்த சிறுவர்களை அதற்கு முன் பார்த்ததில்லை என்று திரு கார்ன் தெரிவித்தார்.
இதற்கிடையே, ஆடவருக்குத் தீவைத்த மூன்று சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டபோதிலும் சிறார் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர்களது பெயர்கள் வெளியிடப்படாது.
இருப்பினும், அச்சிறுவர்கள் மீது கொலை முயற்சி உட்பட மற்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு அருகில் இருந்த தண்ணீர்க் குழாயும் தீயின் காரணமாகச் சேதமடைந்ததாக விசாரணை அதிகாரிகள் கூறினர்.
பொதுச் சொத்தைச் சேதப்படுத்தியதாகவும் சிறுவர்கள் மீது குற்றம் சுமத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆடவருக்குத் தீவைப்பதை அந்தச் சிறுவர்களில் ஒருவர் காணொளி எடுத்து அதை இணையத்தில் பதிவேற்றம் செய்தார்.
பாலத்துக்கு அடியில் தூங்கிக்கொண்டிருந்த ஆடவருக்குத் தீவைத்துவிட்டு அங்கிருந்து அச்சிறுவர்கள் தப்பி ஓடுவதை அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா பதிவு செய்தது.
சிறுவர்களின் இந்தச் செயலால் பலர் கோபக் குரல் எழுப்பியுள்ளனர்.
அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் இணையம் மூலம் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
சிறுவர்களின் நடத்தையைக் கண்காணிக்காமல் கவனக்குறைவுடன் இருந்த அவர்களின் பெற்றோர் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

