அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவி விபத்தில் மரணம்

அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவி விபத்தில் மரணம்

1 mins read
7b0c5ed1-995a-4345-8efa-7ca1941ee4fc
விபத்தில் உயிரிழந்த 25 வயது மாணவி குண்டிபள்ளி சௌமியா. - படம்: கோ ஃபண்ட் மீ

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், யதாத்ரி புவனகிரியைச் சேர்ந்த 25 வயது மாணவி குண்டிபள்ளி சௌமியா, அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நிகழ்ந்த வாகன விபத்தில் உயிரிழந்தார்.

புஃளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டக்கல்வியை முடித்த அவர், ஞாயிற்றுக்கிழமை (மே 26) இரவு சாலையைக் கடந்துகொண்டிருந்தபோது வேகமாக வந்த கார் மோதியதில், சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

யதாத்ரி போங்கிர் மாவட்டம், யாடகரிபள்ளியைச் சேர்ந்த சௌமியா, வேலை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், சௌமியா இறந்த செய்தியை அறிந்ததும் அவருடைய குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மகளின் உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருமாறு பெற்றோர் கோட்டேஸ்வர ராவ்-பாலாமணி தம்பதியர் மத்திய, மாநில அரசிடம் முறையிட்டுள்ளனர்.

முன்னாள் ராணுவ வீரரான திரு ராவ், மே 11ஆம் தேதிதான் தம் மகள் அவரது 25வது பிறந்தநாளைக் கொண்டாடியதாகச் சொன்னார்.

“நான் அவளுக்காக ஆடைகளைக் கூட அனுப்பி வைத்திருந்தேன்,” என்றார் அவர்.

தெலுங்கானா அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, சௌமியாவின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது சடலத்தை மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்