தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பிரான்சில் கைது

1 mins read
cef9fc02-8031-43cf-96c8-2d16cfc5b926
பிரபல டெலிகிராம் செயலி தொடர்பான சட்டவிரோதச் செயல்களுக்குரிய கைதாணையின்கீழ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் திரு பாவெல் துரோவ் கைது செய்யப்பட்டார். - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: ‘டெலிகிராம்’ எனும் பிரபல செய்தி பரிமாற்றச் செயலியின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பாவெல் துரோவ், பாரிஸ் வெளியே உள்ள போர்கெட் விமான நிலையத்தில் ஆகஸ்ட் 24ஆம் தேதி மாலையில் கைது செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.

தமது தனிப்பயன்பாட்டு ஜெட் விமானத்தில் அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருந்ததாகவும் காவல்துறை விசாரணை ஒன்றின் தொடர்பாக பிரான்சில் அவர் மீதான கைதாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, ரஷ்யா, உக்ரேன், முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகள் ஆகியவற்றில் செல்வாக்குமிக்கதாக விளங்கும் டெலிகிராம் செயலியைக் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக், யூடியூப், வாட்ஸ்அப், இன்ஸ்டகிராம், டிக்டாக், விசேட் ஆகிய பிரதான சமூக ஊடகத் தளங்களை அடுத்து டெலிகிராம் தளமும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே, பிரான்சின் உள்துறை அமைச்சும் காவல்துறையினரும் இந்தக் கைது நடவடிக்கை தொடர்பில் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ரஷ்யாவில் பிறந்த பாவெல் துரோவ் தம்முடைய சகோதரருடன் 2013ஆம் ஆண்டு டெலிகிராமை நிறுவினார். இணையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கு டெலிகிராம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் டெலிகிராம் தளம் அச்செயல்களைத் தடையின்றி அனுமதிப்பதாகவும் சந்தேகத்தின் பெயரில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்