2026 இறுதியில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

எல் நினோ மீண்டும் வர வாய்ப்புள்ளதாக ஐநா எச்சரிக்கை

2026 இறுதியில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

2 mins read
51113021-f4d5-4476-90a6-b56c0a82656c
எல் நினோவால் 1996ஆம் ஆண்டில் நீடித்த அதிக வெப்பநிலை, வறட்சி காரணமாக இந்தோனீசியாவின் வேளாண்மை உற்பத்தி ஈராண்டுகளுக்கு பெரிதும் பாதிக்கப்பட்டது. - கோப்புப் படம்: நியூ பேப்பர்
Google News Preferred Icon

ஜெனீவா: வெப்பநிலையை அதிகரிக்கும் ‘எல் நினோ’ பருவநிலை மாற்றம் இவ்வாண்டின் பிற்பகுதியில் மீண்டும் ஏற்படலாம் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) தெரிவித்துள்ளது. இதனால் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

இதற்கு எதிர்மறையான, குளிர்ச்சியான ‘லா நினா’ பலவீனமடைந்து வருவதால் இந்த நிலை ஏற்படலாம் என்று ஐநா உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டியது.

எல்-நினோ என்பது பருவநிலை நிகழ்வு. இது மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பமயமாதலுடன் தொடர்புடைய பருவநிலை மாற்றமாகும்.

எல்-நினோ காலத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனால் கடுமையான வறட்சி ஏற்படும். குறைந்த நேரத்தில் அதீத மழை, திடீர் புயல் போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம். எல் நினோ நிகழ்வு சராசரியாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது என்று வானிலை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பருவநிலை இடைநிலையில் இருக்க 60 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும், மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் எல் நினோ ஏற்பட 40 விழுக்காடு வாய்ப்பு உள்ளதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

வரும் மாதங்களில் நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று ஐநா உலக வானிலை அமைப்பின் தலைவர் செலெஸ்ட் சௌலோ தெரிவித்தார்.

கடந்த 2023 முதல் 24 வரையிலான காலகட்டத்தில் ஏற்பட்ட எல் நினோ, பதிவு செய்யப்பட்ட ஐந்து மோசமான எல் நினோக்களில் ஒன்றாகும். இது 2024ஆம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலையில் புதிய உச்சத்தை எட்டக் காரணமாக இருந்தது.

மனிதனால் தூண்டப்பட்ட பருவநிலை மாற்றத்தின் பின்னணியில் எல் நினோ, லா நினா போன்ற இயற்கை நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தக் கணிப்பின் மூலம் வெளியிடப்படும் தகவல் விவசாயம், சுகாதாரம், எரிசக்தி போன்ற துறைகளுக்கு உதவுவதாக அறிக்கை கூறியது.

குறிப்புச் சொற்கள்
உலகம்எல் நினோபருவநிலைபாதிப்புவெப்பநிலைஅதிகரிப்பு

தொடர்புடைய செய்திகள்