ஈப்போ: ஆன்மீகம், பண்பாடு சார்ந்த சில முயற்சிகளை ஆலய நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று சட்ட மற்றும் கழகச் சீர்திருத்தத்திற்கானபிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்திருக்கிறார்.
நாட்டில் உள்ள ஆலயங்களின் சமூகநல மேம்பாட்டிற்காக மடானி அரசாங்கம் பல நிதி உதவிகளை அவ்வப்போது தொடர்ந்து வழங்கி வருகிறது. இருப்பினும், அரசாங்கம் வழங்கும் அந்த நிதி உதவிகள் ஆலயத்தின் நீண்டகால தேவைக்குப் போதுமானதாக இருக்குமா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
பக்தர்களின் ஒத்துழைப்போடு நிதி திரட்டும் சமூக சேவைத் திட்டங்கள், வருமானம் உருவாக்கும் செயல்பாடுகள் போன்ற முயற்சிகளை ஆலய நிர்வாகம் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
இதன் வழி ஆலயங்கள் பொருளியல் ரீதியில் வலுப்பெற்று சமூக முன்னேற்றத்திற்குச் சிறப்பாகப் பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார்.
‘2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு’டன் இணைந்து உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆன்மீகம், பண்பாடு சார்ந்த சில முயற்சிகளை ஆலய நிர்வாகம் முன்னெடுக்க வேண்டும் என்று எம்.குலசேகரன் வலியுறுத்தினார்.
“சுற்றுப்பயணிகள் மிகவும் முக்கியமானவர்கள். தைப்பூசக் காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்தாலும், பிற நாள்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருகின்றனர். அவர்கள் ஆலயத்திற்கு வந்து அங்குள்ள சிலைகளில் வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் அழகை ரசிக்கின்றனர்.
“இவ்வாண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு. எனவே, இம்முயற்சிகளை மேற்கொள்வது சிறந்தது.
“எனவேதான், ஒரு சிறு அரும்பொருளகத்தை ஆலயத்தில் அமைக்க வேண்டும் என்று நான் ஆலய நிர்வாகத்திடம் கூறினேன்,” என்றார் எம். குலசேகரன்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் நாட்டிலுள்ள ஆலயங்கள் சுற்றுலா வளர்ச்சிக்குத் துணைபுரிவதோடு ஆன்மிகம் மற்றும் பண்பாடு சார்ந்த அனுபவங்களையும் சுற்றுப்பயணிகளுக்கு எடுத்துரைக்கும் என்று அவர் கூறினார்.
தைப்பூசத்தை முன்னிட்டு இரவு பகல் பாராது ரத ஊர்வலத்தில் பணியாற்றிய காவல்துறையினர் மற்றும் தொடர்புடைய அரசாங்க ஊழியர்களுக்கும் ஈப்போ லிட்டில் இந்தியா பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கும் திங்கட்கிழமை (பிப்ரவரி 2) உணவுகளை வழங்கிய பின்னர் ஈப்போ பாராட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் செய்தியாளர்களிடம் பேசியதாக பெர்னாமா செய்தி கூறியது.

