கோலாலம்பூர்: மலேசியாவின் ஆறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 37,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டு உள்ள ஜோகூர், கிளந்தான், திரங்கானு, கெடா, பெர்லிஸ், பேராக் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்காக, அந்த மாநிலங்கள் அனைத்திலும் 322 தற்காலிகத் தங்குமிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் திரு அன்வார் மலேசிய நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தார்.
“ஆறு மாநிலங்களில் தாய்லாந்து எல்லையில் உள்ள கிளந்தான் மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.
“அந்த மாநிலத்தின் 9,223 குடும்பங்களைச் சேர்ந்த 30,582 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்,” என்றார் அவர்.
மலேசியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மழைக்காலம் ஆகும்.
அப்போது, நாட்டின் கிழக்குவட்டார கடலோரப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதுண்டு.
அதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதும் நிலைமை சீரடைந்த பின்னர் மீண்டும் பழைய இடத்தில் அவர்களைக் குடியமர்த்துவதும் வழக்கமாக நடைபெறுபவை.
இந்நிலையில், கிளந்தான், பாகாங் மற்றும் திரங்கானு மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்றும் அது ஆபத்தான அளவுக்கு அதிகரிக்கக்கூடும் என்றும் புதன்கிழமை (நவம்பர் 27) மலேசிய வானிலை ஆய்வகம் தெரிவித்து இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
அந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அம்மூன்று மாநிலங்களுக்கும் ஆபத்தின் அளவைக் குறிப்பதற்கான சிவப்பு எச்சரிக்கையை அது வெளியிட்டது.
பலத்த மழை வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) வரை தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆய்வகம் கூறியது.
இதற்கிடையே, மழைக்காலம் முழுவதும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்படுவோரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு மத்திய, மாநில அமைப்புகளை தேசிய பேரிடர் நிர்வாக முகவை கேட்டுக்கொண்டு உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.