தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நியூசிலாந்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணி

2 mins read
dcc77e0e-733c-4d1c-9714-a2585b5450d3
மத்திய ஆக்லாந்தில் நடந்த மனிதநேயத்திற்கான பேரணியில் சுமார் 50,000 பேர் கலந்து கொண்டனர். - படம்: காணொளிப் படம்

ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் பல்லாயிரம் பேர் திரண்டனர்.

இஸ்ரேலுக்கும் பாஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாசுக்கும் இடையில் காஸா போர் மூண்ட பின்னர் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெற்று இருக்கும் ஆகப்பெரிய பேரணி இது என ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

மத்திய ஆக்லாந்தில் மனிதநேயப் பேரணி என்று அழைக்கப்பட்ட ஊர்வலத்தில் ஏறத்தாழ 50,000 பேர் கலந்துகொண்டதாக ஆட்டேரோவா என்னும் பாலஸ்தீன ஆதரவுக் குழு தெரிவித்தது.

ஆனால், கிட்டத்தட்ட 20,000 பேர் அதில் கலந்துகொண்டதாக நியூசிலாந்து காவல்துறை மதிப்பிட்டது.

பேரணியில் பங்கேற்றோரில் பெரும்பாலானோர் பதாகைகளை ஏந்திச் சென்றனர். ‘இனப்படுகொலையை சாதாரணமாகக் கருதாதீர்’, ‘பாலஸ்தீனர்களின் முதுகெலும்பாகச் செயல்படுங்கள்’ என்பன போன்ற வாசகங்கள் அந்தப் பதாகைகளில் காணப்பட்டதாக நியூசிலாந்து அரசாங்கத் தொலைக்காட்சி கூறியது.

2023 அக்டோபரில் ஹமாஸ் குழுவின் எல்லைகடந்து நடத்திய தாக்குதலில் ஏறத்தாழ 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இஸ்ரேல் பதில் தாக்குதலைத் தொடர்ந்து காஸா போர் தொடங்கியது.

அந்தப் போரில் 64,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகப் பாலஸ்தீன ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, போதுமான உணவு கிடைக்காததால் காஸாவில் பட்டினிச்சாவுகள் நிகழ்ந்து வருவதாக மனிதநேய அமைப்புகள் தெரிவித்துள்ளன.

முன்னதாக, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) பாலஸ்தீன ஆதரவுப் பேரணி நடத்தப்பட்டது.

காஸாவில் இஸ்ரேலின் அண்மைய நடவடிக்கைகள், மனிதாபிமான உதவி இல்லாமல் போனது உட்பட நிலைமை, ‘முற்றிலும் பயங்கரமானது’ என்று ஆகஸ்ட் மாதம் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் விவரித்திருந்தார்.

மேலும் நியூசிலாந்து, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்