அரும்பொருளகத்தில் அலி ஜின்னாவின் புகைப்படத்தால் பங்ளாதேஷில் பதற்றம்

அரும்பொருளகத்தில் அலி ஜின்னாவின் புகைப்படத்தால் பங்ளாதேஷில் பதற்றம்

படம்:ஏஎஃப்பி

22 Sep 2026 - 8:21 pm

1 mins read

டாக்கா: எண்பது ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பாகிஸ்தானின் தேசத் தந்தையென போற்றப்படும் முகம்மது அலி ஜின்னாவின் புகைப்படம் பங்ளாதேஷில் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

பங்ளாதேஷின் தலைமைக் கல்வி நிலையமான டாக்கா பல்கலைக்கழகத்தின் வரலாற்று அரும்பொருளகத்தில் இம்மாதத் தொடக்கத்தில் ஜின்னாவின் புகைப்படம் காட்சிக்கு வைக்கப்பட்டது. அப்புகைப்படம் பிறகு கிழிக்கப்பட்டதுடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது அந்நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்ளாதேஷில் நிலவும் கருத்துவேறுபாடுகளை இச்செயல் வெளிப்படுத்தியுள்ளது.

அபு தாயப் ஹபில்தார் என்ற டாக்கா பல்கலைக்கழக மாணவர் ஜின்னாவை ஒரு கொடிய ‘வில்லன்’ என்று கூறி அப்படத்தைக் கிழித்துச் சேதப்படுத்தினார்.

இந்தச் சர்ச்சை தேசியம், மொழி, மதம் ஆகியன பங்ளாதேஷ் அரசியலில் எவ்வாறு தீவிர தாக்கத்தை ஏற்படுத்த வல்லது என்பதை உணர்த்துகிறது.

கடந்த 2024ல் அப்போதைய ஷேக் ஹசினா அரசாங்கத்தை அரசியல் புரட்சி கவிழ்த்தாலும் ஜின்னா படம் அகற்றப்பட்ட சம்பவம், பழைய காயங்களை ஆறாமல் மீண்டும் உயிர்த்தெழச் செய்துள்ளது.

1947ல் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தபோது மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரு பகுதிகளாக அவை இயங்கின.

அவற்றுக்கு இடையே 1,500 கிலோமீட்டர் பரப்பளவு நிலம் இந்தியாவின் அங்கமாக இருந்தது.

பிறகு அவ்விரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட வேறுபாட்டால், 1971ல் போர் நடந்தது. அன்றுமுதல் மேற்கில் பாகிஸ்தான் எனவும் கிழக்கில் சுதந்திரமடைந்த பங்ளாதேஷ் எனவும் பெயர் மாற்றப்பட்டு அவை இரு வெவ்வேறு நாடுகளாகின. அப்போரில் பாகிஸ்தான் எண்ணற்ற கொடுமைகளைச் செய்ததாக பங்ளாதேஷ் குற்றஞ்சாட்டியது.

குறிப்புச் சொற்கள்