புதைபடிவ எரிபொருள் நீக்கத்தால் காப்31 மாநாட்டில் பதற்றம்

புதைபடிவ எரிபொருள் நீக்கத்தால் காப்31 மாநாட்டில் பதற்றம்

படம்: ராய்ட்டர்ஸ்

22 Nov 2026 - 7:12 pm

2 mins read

அண்டாலியா: புதைபடிவ எரிபொருள்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் இறுதி நேர உடன்பாடு ஒன்றைக் காப்31 தலைமைத்துவம் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) முன்மொழிந்ததால், ஐநா பருவநிலை மாநாட்டில் கடும் பதற்றம் மூண்டுள்ளது.

முந்தைய நாள் மாநாடு கடும் அதிருப்திகளால் குறிப்பிட்ட நேரம் தாண்டி நீடித்த நிலையில், மாநாட்டை இணைந்து நடத்தும் துருக்கியும் ஆஸ்திரேலியாவும் வெளியிட்ட இப்புதிய வரைவு, புதைபடிவ எரிபொருள்கள் குறித்த பதற்றத்தைத் தீர்க்காமல் விட்டுவிட்டாலும், உலகப் பொருளியலை மின்மயமாக்கும் முக்கிய இலக்கைத் தக்கவைத்துள்ளது.

கிட்டத்தட்ட 200 நாடுகளின் ஒருமித்த ஒப்புதலை இம்முன்மொழிவு பெற வேண்டும்.

புதைபடிவ எரிபொருள்களிலிருந்து விலகுவதற்கு வலுவான வாசகங்களை ஐரோப்பிய ஒன்றியமும் பிற நாடுகளும் வலியுறுத்திய நிலையில், சவூதி அரேபியா எதிர்ப்புத் தெரிவித்தது.

இது பின்னோக்கிய நடவடிக்கை என்றும், உடன்பாடு எட்டப்படாமல் மாநாடு முடிய வாய்ப்புள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி கூறினார். எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடுமையாகப் போராடுவதாக ஜெர்மானிய அதிகாரி குறிப்பிட்டார்.

ஈரான் போரால் எழுந்த எரிசக்தி விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு இடையே இம்மாநாடு நடைபெறுகிறது. வெளிநடப்பு மிரட்டல்களைத் தொடர்ந்து, துருக்கியும் ஆஸ்திரேலியாவும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே அவசரக் கூட்டத்தைக் கூட்டின.

புதிய வரைவு 2023 உடன்பாட்டைக் குறிப்பிட்டாலும், புதைபடிவ எரிபொருள்களை வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. செலவுமிக்க, பயனற்றதாக விமர்சிக்கப்படும் கரிமப் பிடிப்புத் திட்டத்தைத் தக்கவைத்துள்ளது. தற்போதைய நிலையில் வரைவுக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என ஆன்டிகுவா, பார்புடா சுற்றுச்சூழல் அமைச்சர் மைக்கேல் ஜோசப் கூறினார்.

மேலும், 2035க்குள் எரிசக்தித் தேவையில் மின்சாரப் பங்கை 35 விழுக்காடாக உயர்த்தவும் தூய எரிசக்தியை விரிவுபடுத்தவும் வரைவு அழைப்பு விடுக்கிறது. டீசல் கார்கள், எரிவாயுச் சூடாக்கிகளுக்குப் பதிலாக மின்சார மாற்றுகளைக் கொண்டுவரத் துருக்கியும் ஆஸ்திரேலியாவும் வலியுறுத்தினாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் தூய மின்மயமாக்கலைச் சில நாடுகள் கோருகின்றன. பாரிஸ் உடன்பாட்டின் 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இலக்கு மீறப்படும் அபாயம் குறித்தும், வளரும் நாடுகளுக்கான 120 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி இலக்கு நீக்கப்பட்டதாலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்