வளைகுடாவில் பதற்றம்; ஈரான் எண்ணெய்க் கப்பல்மீது தாக்குதல்

வளைகுடாவில் பதற்றம்; ஈரான் எண்ணெய்க் கப்பல்மீது தாக்குதல்

2 mins read
a999982d-15bb-477d-9951-fc67a5fe9495
ஈரானின் கார்க் தீவில் இயங்கிவரும் கச்சா எண்ணெய் முனையத்தின் செயற்கைக்கோள் படம். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

டெஹ்ரான்: ஈரானின் ஆகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு அமைந்துள்ள பாரசீக வளைகுடாப் பகுதியில் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன. 

அங்குள்ள ஈரானிய எண்ணெய்க் கப்பல் (டேங்கர்) ஒன்று தாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இச்சம்பவம் அனைத்துலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவல்படி, வளைகுடாக் கடல் பகுதியில் திடீரெனப் பலத்த வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்க் தீவிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இந்தச் சம்பவங்கள் நடந்துள்ளதால், அப்பகுதியில் உள்ள முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பு நிலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரானிய எண்ணெய்க் கப்பல்மீது அமெரிக்கப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தத் தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ பின்னணி, சேத விவரங்கள், உயிரிழப்புகள் பற்றிய தெளிவான தகவல்களை ஈரான், அமெரிக்கத் தரப்புகள் உடனடியாகப் வெளியிடவில்லை.

ஈரானின் ஒட்டுமொத்தக் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கு, இந்த உத்திபூர்வமிக்க கார்க் தீவு முனையம் வழியாகவே கடந்து செல்கிறது. 

எனவே இந்த எண்ணெய் முனையத்தின் கப்பல் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி, ஆசியக் கடல்சார் வர்த்தகப் பாதைகள் உள்ளிட்ட உலகளாவிய எண்ணெய்ச் சந்தையில் திடீர்ச் சலசலப்பையும் கவலையையும் உருவாக்கியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி, கார்க் தீவில் அமைந்துள்ள நிலவழி எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலைகள், சேமிப்புக் கிடங்குகளுக்கு நேரடிப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து ஈரான் அரசாங்கம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இப்பகுதியில் நிலவும் அசாதாரணமான சூழலை உலக நாடுகளும் எண்ணெய்ச் சந்தை நிபுணர்களும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும், இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட தாக்குதலா? ராணுவப் பயிற்சியின் விளைவா? தொழிற்பேட்டை விபத்தா? என்பது குறித்தும் ஈரான் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

குறிப்புச் சொற்கள்
ஈரான்தாக்குதல்பதற்றம்எண்ணெய்