ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவின் தாமான் பெர்லிங் பகுதியில் நிறுத்தப்பட்ட டெஸ்லா காரின் கண்ணாடி சன்னலை உடைத்து, பணப்பையைத் திருடிச் சென்ற சந்தேகத்தின் பேரில் சிலரைத் தேடி வருவதாக மலேசியக் காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 25) நடந்த இச்சம்பவத்தில் 100,000 ரிங்கிட் பணம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வியாழக்கிழமை பிற்பகல் 1.34 மணிக்கு இச்சம்பவம் குறித்து 34 வயது ஆடவர் புகாரளித்ததாக ஜோகூர் பாரு வடக்கு காவல்துறைத் துணை ஆணையர் பல்வீர் சிங் மகிந்தர் சிங் கூறினார்.
சம்பவம் குறித்த தகவல்கள் ஃபேஸ்புக்கில் அதிகம் பரவின.
முதற்கட்ட விசாரணையில் வியாழக்கிழமை காலை 10.11 மணியளவில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்ததாகத் திரு பல்வீர் சிங் கூறினார்.
காரின் உரிமையாளர் தனது காரை அங்கு நிறுத்திய பிறகு அதன் கதவுகளைப் பூட்டிவிட்டுச் சென்றதாகவும் திரும்பிவந்து பார்த்தபோது சன்னல் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் கூறினார்.
கிட்டத்தட்ட 100,000 ரிங்கிட் பணம் வைத்திருந்த பையையும் காணவில்லை என்றார் அவர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெறுவதாகக் கூறிய திரு சிங், தகவலறிந்த பொதுமக்கள் காவல்துறையை 07-556 3122 என்ற தொலைபேசி எண்ணில் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தைத் தொடர்புகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.