தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் புத்தாக்கங்களுக்கு சோதனைக் கூடம்

2 mins read
ef4a53c7-45a5-4ac3-9b2e-2b22c4821270
பொங்கோலில் செப்டம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) அன்று நடந்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழக (எஸ்ஐடி) பொங்கோல் வளாக அதிகாரபூர்வத் திறப்பு விழாவில் பிரதமர் லாரன்ஸ் வோங் எஸ்ஐடியின் பேட்டைகளுக்கான இணை துணைத் தலைவர் கெரி வீயுடன் (இடதிலிருந்து இரண்டாவது) வளாகத்தின் மாதிரி வடிவை பார்வையிடுகிறார். - படம்:ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் (எஸ்ஐடி), பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் (பிடிடி) முழுவதிலும் புத்தாக்க யோசனைகளுக்கென சோதனைக் கூடம் ஒன்றை உருவாக்கத் திட்டமிடுகிறது.

அதற்கென ஜூரோங் நகராண்மைக் கழகம், (ஜேடிசி) தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) ஆகிய அமைப்புகளுடனும் தொழில்துறைப் பங்காளிகளுடனும் இணைந்து கழகம் செயல்படவிருக்கின்றது.

பொங்கோலையும் கடந்து பல பகுதிகளிலும் இந்தச் சோதனை நடவடிக்கைகள் பலனளிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

“தொழில்நுட்பக் கல்விக் கழகம், இவ்வளாகத்தை இவைபோன்ற முன்முயற்சிகளின் வழியாக, சாத்தியக்கூறுகளுக்கான தளமாக உருமாற்றி வருகின்றது,” என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறினார்.

செப்டம்பர் 16 (செவ்வாய்க்கிழமை) அன்று நடந்த சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் பொங்கோல் வளாக அதிகாரபூர்வ திறப்பு விழாவில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், தொழில்துறை பங்காளிகள், நன்கொடையாளர்கள் ஆகியோருடன் கலந்துகொண்டு பிரதமர் லாரன்ஸ் வோங் உரையாற்றினார்.

தன்னிச்சையாக செயல்படும் இயந்திர மனிதர்கள் (ரோபோட்ஸ்) ஒரு வளாகத்தில் பல சேவைகளை வழங்கமுடியும். கண்காணித்தல், சந்தேகம் விளைவிக்கும் பொருள்களைக் கண்டறிந்து தேவைப்படும்போது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் அவை வடிவமைக்கப்படலாம் என்றும் பிரதமர் கூறினார்.

இந்தத் திட்டம் சார்ந்து, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்புடன் ஒன்றிணைந்து, அக்டோபர் மாதத்தில் முதலாளிகளுக்கு இணையம் வாயிலாகத் திறன் மதிப்பீடுகளை நடத்தவிருக்கின்றது. இந்த மதிப்பீடு பொதுமக்களுக்கு 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் முதல் பயன்பாட்டுக் கற்றல் பல்கலைக்கழகமாக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் திகழ்கிறது. பயன்பாட்டுக் கற்றலை நடைமுறைப்படுத்தி தொழில்சார்ந்த பங்காளிகளுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் அதன் முக்கிய இலக்காகும்.

குறிப்புச் சொற்கள்