தாங்கள் தயாரிக்கும் உணவுப் பொருள்கள் பாதுகாப்பாய் இருப்பதைச் சோதனைகள் காட்டுவதாக கோலாலம்பூரில் செயல்படும் கார்டினியா பேக்கரிஸ் ரொட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்களின் உணவுப் பொருள்களை உட்கொண்டதால் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளானதாகப் பயனீட்டாளர்கள் சிலர் புகார் கூறியதைத் தொடர்ந்து கார்டினியா இவ்வாறு கூறியுள்ளது.
அங்கீகாரம் வழங்கப்பட்ட சுயேச்சை ஆய்வுக் கூடங்கள் நடத்திய சோதனைகளில் சம்பந்தப்பட்ட கார்டினியா உணவுப் பொருள்கள், மலேசியா உணவுச் சட்டம் 1983ன்கீழ் தங்களின் உணவுப் பொருள்கள் பாதுகாப்புத் தரநிலைகளையும் நிபந்தனைகளையும் பூர்த்திசெய்ததாக அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) சமூக ஊடகத்தில் அறிக்கை மூலம் தெரிவித்தன.
கார்டினியா உணவுப் பொருள்களை உட்கொண்டதால் தாங்கள் நச்சுணவுப் பிரச்சினைக்கு ஆளானதாக சிலர் தெரிவித்த புகார்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. குறிப்பாக கார்டினியாவின் பாரம்பரிய வெள்ளை ரொட்டியும் டுவிகீஸ் சோக்-அ-லோட் (Original Classic White Bread, Twiggies Choc-A-Lot) ஆகியவற்றுக்கு இது பொருந்தும்.
மலேசிய சுகாதார அமைச்சின் விசாரணையின் ஓர் அங்கமாக அதன் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தங்களின் உற்பத்தி ஆலைகளுக்கு நேரில் வந்ததாக கார்டினியா பேக்கரிஸ் கோலாலம்பூர் கூறியது.
“நடவடிக்கை முழுவதிலும் எங்களின் முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். அதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு சம்பந்தமான எங்களின் செயல்பாட்டு முறைகள், நடவடிக்கைகளின் தொடர்பில் சுகாதார அமைச்சு திருப்தியடைந்தது,” என்று கார்டினியா சொன்னது.
