தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

24 பேரைப் பலிவாங்கிய டெக்சஸ் வெள்ளம்

2 mins read
2fed084c-66d7-4eaf-9f5b-178b0c5f9075
அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 24 பேர் மாண்டனர். - படம்: ஏஃப்பி

டெக்சஸ்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 24 பேர் மாண்டதை அடுத்து அங்கு தேடல் மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றன. அங்கிருக்கும் கிறிஸ்துவக் கோடைக்கால முகாம் ஒன்றில் இருந்த பல சிறுமிகளையும் காணவில்லை.

குவாடலுப் ஆற்றின் நீர்மட்டம் ஒரு மணி நேரத்துக்குள் 26 அடி உயரத்துக்கு அதிகரித்ததை அடுத்து ஒரு சிறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெருகிய வெள்ளத்தில் தற்காலிக வீடுகள், வாகனங்கள் ஆகியவை அடித்துச் செல்லப்பட்டன.

சன் அண்டோனியோவுக்கு வடமேற்கிலிருந்து சுமார் 104 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கெர்வில் நகரில் ‘கேம்ப் மிஸ்டிக்’ (Camp Mystic) முகாமில் கிட்டத்தட்ட 750 சிறுமிகள் இருந்தனர். அவர்களில் ஏறக்குறைய 25 பேரைக் காணவில்லை.

பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு தொலைபேசி இணைப்புகளும் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டன.

- படம்: ஏஎஃப்பி

வெள்ள நிலவரம் அதிர்ச்சியளிக்கிறது என்றும் மோசமாக உள்ளது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகை கூடுதல் உதவிகளை வழங்க உறுதிகூறியது.

வேகமாக அடித்துச் செல்லும் வெள்ள நீர் பாலங்களையும் சாலைகளையும் மூடியது.

- படம்: ராய்ட்டர்ஸ்

அதிகாரிகள் பிள்ளைகளின் பெற்றோரைத் தொடர்பு கொள்ளவில்லை எனில் அந்தப் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று அர்த்தம் என உறுதிகூறினார் டெக்சஸ் துணைநிலை ஆளுநர் டே பேட்ரிக்.

“காணாமற்போன பிள்ளைகள் தொலைந்துவிட்டார்கள் என்று நினைக்கவேண்டாம். அவர்களால் உங்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று தெரிந்துகொள்ளுங்கள்,” என்றார் அவர்.

ஹெலிகாப்டர்கள், ஆளில்லா வானூர்திகள், படகுகள் ஆகியவை மூலம் தேடல், மீட்புப் பணிகள் தொடர்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

- படம்: ஏஎஃப்பி
குறிப்புச் சொற்கள்