11 புத்த பிக்குகளுடன் உறவில் இருந்ததாகக் கூறப்படும் பெண் கைது

சர்ச்சையில் சிக்கிய தாய்லாந்து புத்த பிக்குகள்

2 mins read
3657da64-6c5d-4b3a-b9ba-8c5aa38fadbc
புத்த பிக்கு ஒருவர் பேங்காக் ஆலயத்திற்கு வெளியே யாசகம் பெறத் தயாராகிறார். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: தாய்லாந்தில் குறைந்தது 11 புத்த பிக்குகளுடன் முறையற்ற உறவுகொண்டதாக நம்பப்படும் பெண் ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். அந்தப் பெண் புத்த பிக்குகளின் ரகசியப் படங்களை வைத்து அவர்களிடம் பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் புத்த பிக்குகள் பெளத்த ஆலயங்களுக்கு மக்கள் நன்கொடையாக வழங்கிய கிட்டத்தட்ட $12 மில்லியன் டாலர் (S$15.4 மில்லியன்) பணத்தைப் பெண்ணிடம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

துறவறம் பூண்ட புத்த பிக்குகளின் அத்தகைய செயல் பெளத்த சமயம் மீதான மக்களின் நம்பிக்கையைப் பாதித்துள்ளது.

தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தமது 73வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளும்படி 80க்கும் அதிகமான புத்த பிக்குகளுக்கு விடுத்த அழைப்பை இப்போதைய சம்பவத்தை அடுத்து ரத்து செய்தார்.

“தாய்லாந்து மக்களிடையே அவர்களின் தகாத செயல் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது,” என்றார் அவர்.

சம்பவத்துடன் தொடர்புடைய 11 புத்த பிக்குகளின் அங்கீகாரமும் நீக்கப்பட்டன.

தாய்லாந்தின் பெளத்த சமயத்தின் தேசிய அலுவலகம், காவல்துறையின் விசாரணை மூலம் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்படுத்த உறுதிகூறியது.

தாய்லாந்து ஆடவர்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது புத்த பிக்குகளாகத் துறவறம் மேற்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது ஒரு சில வாரங்களிலிருந்து பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

- படம்: ஏஎஃப்பி

அத்தகைய புத்த பிக்குகள் பெண்களைத் தொடக்கூடாது, முறையற்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என 227 கடுமையான விதிமுறைகளைப் பின்பற்றுவது கட்டாயம்.

புத்த பிக்குகள் உணவு போன்ற பொருள்களை யாசகமாகப் பெற்று வாழ்வார்கள். ஒவ்வொரு மாதமும் அவர்களுக்கு $170 டாலர் படித்தொகை வழங்கப்படும்.

- படம்: ஏஎஃப்பி

புத்த பிக்குகளை மிரட்டி பணம் பெற்ற பெண், அவர்கள் நாள் ஒன்றுக்கு $90,000 டாலர் மதிப்பிலான பொருள்களை வாங்கித் தருவதால் தாராளமாகச் செலவு செய்யும் மனநிலை தமக்கு ஏற்பட்டுவிட்டதாகத் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.

தாய்லாந்தின் புத்த பிக்குகள் இத்தகைய சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறை அல்ல.

2017ஆம் ஆண்டு பேங்காங்கின் வடக்கில் உள்ள வாட் தமாக்காயா ஆலயத்துக்குப் பொதுமக்கள் அளித்த $33 மில்லியன் நன்கொடையில் பணமோசடி நடந்ததாக முன்னாள் மடாதிபதி கைதுசெய்யப்பட்டார்.

இவ்வாண்டு இணையச் சூதாட்டக் கட்டமைப்புக்காக கிட்டத்தட்ட $10 மில்லியன் டாலர் பணத்தைக் கையாடல் செய்ததாக நம்பப்படும் மற்றொரு புத்த பிக்கு கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்