தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எல்லை மோதல்: தாய்லாந்து-கம்போடிய ராணுவத் தலைவர்கள் சந்திப்பு

2 mins read
b286b388-2c8c-45bf-b0e0-870df7e15a27
எல்லையில் தாய்லாந்து, கம்போடிய வீரர்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கம்போடிய வீரர் உயிரிழந்தார். - படம்: இபிஏ

பேங்காக்: கம்போடிய-தாய்லாந்து எல்லையில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதற்றம் எழுந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, அந்த இரு நாடுகளின் ராணுவத் தலைவர்களும் வியாழக்கிழமை (மே 29) சந்தித்துப் பேசத் திட்டமிட்டனர்.

இந்நிலையில், இருதரப்பும் அமைதி காக்க வேண்டும் என்றும் கலந்து பேச வேண்டும் என்றும் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா தெரிவித்து உள்ளார்.

“இந்த விவகாரத்தில் நம்மால் எந்த மாதிரியான உடன்பாட்டை ஏற்படுத்த இயலும் என்பது பற்றி விவாதிப்போம்,” என்று அவர் வியாழக்கிழமை (மே 29) கூறினார்.

மேலும், இரு நாட்டு ராணுவத் தலைவர்களும் சந்திக்கும்போது சாதகமான முடிவுகள் எட்டப்படும் என்று கம்போடியப் பிரதமர் ஹுன் மானேட் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

ராணுவத் தலைவர்களின் சந்திப்பு வியாழக்கிழமை பிற்பகலில் நடைபெறும் என்று தாய்லாந்து தற்காப்பு அமைச்சர் பும்தம் வெச்சாயாச்சாய், செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

கம்போடியா, தாய்லாந்து ஆகிய இருதரப்பிலும் தவறான புரிதல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

எல்லையில் புதன்கிழமை (மே 28) தாய்லாந்து ராணுவத்துடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் கம்போடிய வீரர் உயிரிழந்ததாக கம்போடிய ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஆசியான் மாநாட்டில் கம்போடிய, தாய்லாந்துத் தலைவர்கள் பங்கேற்றுள்ள வேளையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கம்போடியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டதால் திருப்பிச் சுட நேரிட்டதாக தாய்லாந்து ராணுவம் கூறியுள்ளது.

அந்தச் சண்டை ஏறத்தாழ 10 நிமிடங்கள் நீடித்ததாகவும் சண்டையை நிறுத்துமாறு கம்போடியத் தரப்பு கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மோதல் கைவிடப்பட்டதாகவும் தாய்லாந்து தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்