தாய்லாந்துக் குடிமக்கள் ஈரானிலிருந்து வெளியேறத் தயாராகும்படி அறிவுறுத்து

தாய்லாந்துக் குடிமக்கள் ஈரானிலிருந்து வெளியேறத் தயாராகும்படி அறிவுறுத்து

1 mins read
eaa0026e-f978-4e3a-b978-d14b7f97a809
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய இருவாரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடித்த அமைதியாகக் கருதக்கூடாது என்று டெஹ்ரானிலுள்ள தாய்லாந்துத் தூதரகம் தெரிவித்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஈரானிலிருந்து உடனடியாக வெளியேறத் தயாராகும்படி தாய்லாந்துக் குடிமக்களை டெஹ்ரானிலுள்ள அந்நாட்டுத் தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.

ஈரானில் நிலைமை மோசமாக இருக்கிறது என்றும் கூடிய விரைவில் அதன்மீது புதிய தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்றும் அது மதிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய இருவாரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நீடித்த அமைதியாகக் கருதக்கூடாது என்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 14) வெளியிட்ட அறிவிப்பில் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா-ஈரான் இடையிலான பேச்சுவார்த்தை பெரும்பாலும் தோல்வியில் முடியலாம் என்றும் அது கணித்துள்ளது.

தற்காலிகப் போர்நிறுத்தம் முடிந்ததும், அல்லது பேச்சுவார்த்தை முற்றிலுமாக முறிந்துபோனால், மீண்டும் தாக்குதல்கள் நடத்தப்பட அதிக வாய்ப்புள்ளது என்றும் வன்முறை முன்பைவிட மோசமாக இருக்கலாம் என்றும் தாய்லாந்துத் தூதரகம் எச்சரித்துள்ளது.

ஈரானின் தென்பகுதி, குறிப்பாக பாரசீக வளைகுடாக் கடலோரப் பகுதியும் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டிய பகுதியும் மிகவும் அபாயமான சூழலில் இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, ஈரானிலுள்ள தாய்லாந்துக் குடிமக்களுக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. அபாயமிக்க ஈரானின் தென்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன், கடப்பிதழ், முக்கிய ஆவணங்கள், மருந்துப் பொருள்கள், அவசரகாலத்திற்குத் தேவையான உடைமைகள் ஆகியவற்றுடன் ஈரானிலுள்ள தாய்லாந்துக் குடிமக்கள் எப்போதும் ஈரானைவிட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறும் தூதரகம் வலியுறுத்தி இருக்கிறது.

அடுத்த அறிவிப்பு வெளியாகும்வரை தாய்லாந்திலுள்ள அந்நாட்டவர் ஈரானுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்