பிட்டா நாடாளுமன்றம் திரும்புவதற்கு தாய்லாந்து நீதிமன்றம் ஒப்புதல்

2 mins read
45716b8f-a1e3-44c4-aae7-1d0e021e30a6
நீதிமன்றத்தின் முன்னால் செய்தியாளர் கூட்டத்தின் மத்தியில் காணப்படும் பிட்டா லிம்ஜாரோன்ராட். - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஊடக நிறுவனத்தில் தாய்லாந்தின் முக்கிய எதிர்க்கட்சி பிரமுகரான பிட்டா லிம்ஜாரோன்ராட், பங்குகள் வைத்திருந்ததன் தொடர்பில் எவ்வித விதிமீறலும் இல்லை என்று அந்நாட்டு அரசு நீதிமன்றம் ஜனவரி 24ஆம் தேதியன்று தீர்ப்பளித்தது.

இதன் மூலம் ஆறு மாதங்களுக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்ட பிட்டா, 43, நாடாளுமன்றத்திற்குத் திரும்ப இயலும்.

இந்தத் தீர்ப்பு வெளியாகும் வரை ஜூலை 2023 முதல் நாடாளுமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சியின் முன்னாள் தலைவர் திரு பிட்டா.

அவரின் கட்சிக்கு 2023ஆம் ஆண்டு மே மாதம் நடந்த பொதுத் தேர்தலில் அதிக இடங்கள் கிடைத்தபோதும் தாய்லாந்தின் பிரதமர் ஆவதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை அவர் பெறத் தவறினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் ‘ஐடிவி’ என்ற ஊடக நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்ததால் பிட்டா நாடாளுமன்றத்தில் தன் இடத்தை இழக்கக்கூடும் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இருப்பினும், 2007ஆம் ஆண்டில் அந்த ஊடக நிறுவனம் அதன் ஒளிபரப்புச் சலுகையை இழந்துவிட்டது.

ஊடக வர்த்தகங்களை வைத்திருப்போர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட முடியாது. இருப்பினும், காலஞ்சென்ற தம் தந்தையிடமிருந்து பங்குகளைப் பெற்ற திரு பிட்டா, அது செயல்பாட்டில் இல்லாத ஓர் ஊடக அமைப்பு என்று வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு திரு பிட்டா பதிவுசெய்தபோது ஊடக வர்த்தகத்தில் ‘ஐடிவி’ இல்லை என்பதை உறுதிபட கூறியது.

தீர்ப்பை அடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட திரு பிட்டா நன்றி உரைத்ததுடன், “நான் அனுமதிக்கப்பட்ட உடனே நாடாளுமன்றத்தில் என் பணியைத் தொடங்கிவிடுவேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்