குழந்தைக்காக நீதி கேட்டவரே நீதிக்கு முன்னால் நிறுத்தப்பட்டார்

2 mins read
92896bf9-fd9c-4a42-b4ca-8db7836c4be7
தமது 3 வயது மருமகளைக் கொன்றதற்காக 47 வயது சாய்போல் விப்பாவுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. - படம்: இணையம்

பேங்காக்: உயிரற்ற தமது மூன்று வயது மருமகளின் உடலைத் தாங்கிக்கொண்டு கண்ணீருடன் நீதி கேட்ட சாய்போல் விப்பா, இப்போது சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

‘அங்கிள் போல்’ என்று இணையத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் பிரபலமான அந்த ஆடவர், உயிரிழந்த தமது மருமகளுக்காக நியாயம் கேட்ட காட்சியைப் பலரும் மறந்திருக்க முடியாது.

இருப்பினும், 1,316 நாள்கள் கடந்து இப்போது குற்றவாளி என நிரூபணமான சாய்போலுக்கு தாய்லாந்தின் முக்டாஹான் நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

மூன்று வயது சிறுமி ஒராவான் வோங்ஸ்‌ரிச்சா 2020ஆம் ஆண்டு மே 11ஆம் தேதியன்று தன் வீட்டிலிருந்து காணாமல் போனதை அடுத்து, ஆடைகளின்றி அவளின் உடல் மே 14ஆம் தேதியன்று அருகிலிருந்து தேசியப் பூங்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.

வலுவான ஆதாரங்களும் சாட்சிகளும் இல்லாத காரணத்தால் காவல்துறையினர் தங்களின் புலன்விசாரணையை முடிப்பதற்குக் கிட்டத்தட்ட ஈராண்டு காலம் எடுத்தது.

தாய்லாந்து மக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது இந்த வழக்கு.

தங்களின் குழந்தையை சாய்போல் கடத்தியிருக்கலாம் என்று சிறுமியின் பெற்றோர் தங்களின் சந்தேகத்தைத் தெரிவித்தபோது சாய்போல் மீது பொதுமக்கள் பலரும் அனுதாபப்பட்டனர்.

வீட்டைக் காக்கும் நாய் குரைக்கவில்லை என்றும் பிள்ளை கடத்தப்பட்டபோது அவர் அழவில்லை என்றும் பெற்றோர் கூறியிருந்தனர்.

அத்துடன், குழந்தையின் உடலிலும் பெண் உறுப்பிலும் பல காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

இருப்பினும், குழந்தை மீதான தனது அன்பை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தும் வகையில் குழந்தையின் மாமா சாய்போல் பேசியதில் மக்கள் அவர்மீது அதிகம் இரக்கப்பட்டனர்.

இந்த ஆதரவால் சாய்போல் பலராலும் கொண்டாடப்படும் ஒரு பிரபலம் ஆனார்.

இருப்பினும், குழந்தை காணாமல் போன நேரத்தில் சாய்போல் எங்கு இருந்தார் என்ற விவரங்களை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை.

வீட்டுக்கு வருவதற்கு முன்னரே சிறுமி காணாமல் போனதை சாய்போல் அறிந்திருந்ததையும் நீதிமன்றம் சுட்டியது.

சிறுமி காணாமற்போன நாளன்று தான் ரப்பர் தோட்டம் ஒன்றில் காலை 7 மணி முதல் இருந்ததாகச் சாட்சி ஒருவரை சாய்போல் நம்பவைக்க முயன்றதையும் நீதிமன்றம் அறிந்துகொண்டது.

தான் தவறு செய்ததை மறைப்பது போல் இச்செயல் இருந்ததென நீதிமன்றம் கருதியது.

குறிப்புச் சொற்கள்