பாங்காக்: கடந்த மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று ‘மூவ் ஃபார்வர்ட்’ கட்சி வெற்றி பெற்றது.
தாய்லாந்தில் அடுத்து அரசாங்கத்தை அமைக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்தக் கட்சி தற்போது எட்டுக் கட்சிக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர் புதன்கிழமை தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளியலான தாய்லாந்து தேர்தலுக்குப்பிறகு பெருங்குழப்பத்தில் உள்ளது. இந்தத் தேர்தலில் அதிக ஆதரவு பெற்ற கட்சியாக மூவ் ஃபார்வர்ட் கட்சி விளங்கியது.
அதனைத் தொடர்ந்து, இரண்டாவது பெரிய கட்சியாக பியூ தாய் கட்சி உருவெடுத்தது.
பியூ தாய் கட்சி, எட்டுக் கட்சிக் கூட்டணியில் மூவ் ஃபார்வர்ட் கட்சி இனி இல்லை என்பதை தெரிவிப்பதற்காக எங்களை அழைத்தது என ‘பழங் சகோம் மாய்’ கட்சியின் தலைவர் ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
புதன்கிழமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த பிறகு இதுகுறித்து கருத்து தெரிவிக்கப்படும் என மூவ் ஃபார்வர்ட் கட்சியின் பேச்சாளர் கூறினார்.