பேங்காக்: தாய்லாந்தின் வடக்கில் தொடரும் வெள்ளம் சுற்றுலாத் துறைக்கு சுமார் 491 மில்லியன் பாட் (S$19 மில்லியன்) மதிப்புள்ள சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்நாட்டின் இடைக்கால பயணத்துறை, விளையாட்டுத் துறை அமைச்சர் செர்ம்சக் போங்பனிட் தெரிவித்துள்ளார்.
“சியாங் ராய், ஃபாயோ, நான், ஃபிரே, சுகோத்தாய், உத்தராதிட் போன்ற பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கை அமைச்சு கண்காணித்து வருகிறது,” என்று திரு செர்ம்சக் ஆகஸ்ட் 29ஆம் தேதி கூறினார்.
கடுமையான வெள்ளம் வருகையாளர்களின் எண்ணிக்கையை 57,092 ஆகக் குறைத்துள்ளது. இதனால் சுற்றுலாவுக்காக அவர்கள் செலவிடும் தொகை சுமார் 200 மில்லியன் பாட் குறைந்துள்ளது என்று அவர் கூறினார். 628 பயணத்துறைப் பணியாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக சில சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
தாய்லாந்தின் பயணத்துறை அமைச்சும், தாய்லாந்து பயணத்துறை ஆணையமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் பயணத்துறை மறுசீரமைப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளதாக திரு செர்ம்சாக் கூறினார்.
மீட்பு உத்திபூர்வத் திட்டத்தில் பங்குபெறும் விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள் வழங்கும் சலுகைகள், பயணத்துறை ஊக்குவிப்பு இயக்கங்கள் ஆகியவை, அந்நாட்டுக்கு வருகையாளர்களை மீண்டும் கவரும் வகையில் வகுக்கப்படும்.
‘அமேசிங் நான் மாரத்தான்’, ‘சியாங் ராயின் வெட் சீரிஸ் இசை விழா 2024’, ஃபிரேயில் கலை, கலாசாரக் கண்காட்சி போன்ற நிகழ்வுகளைப் பயணத்துறை ஊக்குவிப்பு இயக்கங்கள் முன்னிலைப்படுத்தும்.
“அரசு வங்கிகள் மூலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு உதவ அவசர நடவடிக்கைகளை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. கடன் செலுத்துதலுக்கான இடைநிறுத்தம், மீட்சிக்காக அறிமுகப்படுத்தப்படும் குறைந்த வட்டி கடன்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்,” என்று திரு செர்ம்சாக் மேலும் கூறினார் என்று தி நேஷன் செய்தித்தளம் தெரிவித்தது.

