தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்து: அனைத்து ‘சிஎன்ஜி’ பேருந்துகளிலும் சோதனை

2 mins read
ed362956-842b-40f6-bbb3-1697a3ed4309
பேருந்தில் இருந்த 39 மாணவர்கள், 6 ஆசிரியர்களில், இருபது மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் தீக்கிரையாயினர். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) கலன்கள் பொருத்தப்பட்ட அனைத்துப் பயணிப் பேருந்துகளையும் சோதனை செய்ய, நிலப் போக்குவரத்துத் துறைக்கு தாய்லாந்து போக்குவரத்து அமைச்சு இரண்டு மாதகால அவகாசம் கொடுத்துள்ளது.

அந்தப் பேருந்துகள் தீப்பாதுகாப்புத் தரங்களை நிறைவேற்றுகின்றனவா என்பதை உறுதிசெய்ய அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துணை அமைச்சர் சுராபொங் பியாச்சொட் கூறினார்.

‘பத்தும் தானி’இல் அக்டோபர் 1ஆம் தேதி மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த எரிவாயுவில் இயங்கிய சுற்றுலாப் பேருந்து ஒன்று தீப்பிடித்ததை அடுத்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துபேச அமைச்சின் நிர்வாகிகள் அக்டோபர் 2ஆம் தேதி சந்தித்தனர்.

அந்தப் பேருந்தில் இருந்த 39 மாணவர்கள், 6 ஆசிரியர்களில், இருபது மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் தீக்கிரையாயினர்.

தொடக்கப்பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுற்றுலாப் பயணத்தில் ‘அயுத்தயா’வுக்கு அழைத்துச்செல்ல, ‘உத்தாய் தனி’இல் உள்ள ‘வாட் காவ் பயா சங்கரம்’ பள்ளி ஏற்பாடு செய்த மூன்று பேருந்துகளில் அந்தப் பேருந்தும் ஒன்று.

தாய்லாந்தில் 13,426 பயணிப் பேருந்துகள் ‘சிஎன்ஜி’ எரிபொருளைப் பயன்படுத்துவதாகப் பதிவானது என நிலப் போக்குவரத்துத் துறை கூறியது.

அவற்றில், 10,491 வழக்கமான பாதைகளுக்குச் சேவையளிப்பதாகவும் 2,935 வாடகைக்கு எடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

பேருந்துகளைச் சோதிக்கும் நடவடிக்கை இரண்டு மாதங்களில் அல்லது நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்பட வேண்டும் என்று திரு சுராபொங் கூறினார்.

அனைத்துப் பேருந்து ஓட்டுநர்களும் ஊழியர்களும் பாதுகாப்பு, நெருக்கடி சமாளிப்புப் பயற்சியை மேற்கொள்வதற்கான விதிமுறை ஒன்றை வரையுமாறும் அவர் நிலப் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிச் சுற்றுலா பயணங்களுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்துப் பேருந்துகளும், பயன்படுத்தப்படுவதற்கு முன்னர், தகுந்த சோதனையை மேற்கொண்டு பாதுகாப்புத் தரச் சோதனைகளை நிறைவேற்றியிருப்பதை உறுதிசெய்ய, போக்குவரத்துத் துறை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சாலைப் பாதுகாப்பை உறுதிசெய்ய, பயணிப் பேருந்துகளுக்கான அதிகபட்ச சேவையாண்டை மாற்றியமைப்பது குறித்து சம்பந்தப்பட்ட அமைப்புகள் யோசிக்க வேண்டும் என்று அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்