தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாய்லாந்துப் பிரதமராக பேடோங்டார்ன் ஷினவாத் அங்கீகரிப்பு

2 mins read
b4e24e69-c769-457c-a673-cfdeacf01690
திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத் தமது தந்தையான முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்துடன் பியூ தாய் கட்சியின் தலைமையகத்தைச் சென்றடைந்தார். - படம்: ராய்ட்டர்ஸ்

பேங்காக்: தாய்லாந்து மன்னர் ஆகஸ்ட் 18ஆம் தேதி திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத்தை அந்நாட்டுப் பிரதமராக அங்கீகரித்துள்ளார்.

நாடாளுமன்றம் அவரைத் தேர்ந்தெடுத்து இரண்டு நாள்களான நிலையில், மன்னரின் அங்கீகரிப்பு வந்துள்ளது.

திருவாட்டி பேடோங்டார்ன், 37, தாய்லாந்தின் ஆக இளைய பிரதமராகிறார். சில நாள்களுக்கு முன்னர் திரு ஸ்ரெத்தா தவிசின் அரசமைப்பு நீதிமன்றத்தால் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் மகளான திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத் ஆகஸ்ட் 16ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று வெற்றிகண்டார்.

அதன்வழி, தாய்லாந்தின் இரண்டாவது பெண் பிரதமராகவும், பிரதமர் பதவியை ஏற்கும் மூன்றாவது ஷினவாத் குடும்ப உறுப்பினராகவும் அவர் திகழ்கிறார்.

முன்னதாக, திருவாட்டி பேடோங்டார்ன் ஷினவாத்தின் அத்தையான திருவாட்டி யிங்லக் ஷினவாத்தும் தாய்லாந்தின் பிரதமராகப் பதவி வகித்தவர்.

பேங்காக்கில் நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்வு ஒன்றில், பிரதிநிதிகள் சபைச் செயலாளர் அப்பாட் சுக்கானண்ட் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் வழங்கிய ஒப்புதலை வாசித்தார்.

அதிகாரபூர்வ சீருடை அணிந்திருந்த திருவாட்டி பேடோங்டார்ன், மன்னர் வஜிரலோங்கோர்னின் படத்திற்கு மரியாதை செலுத்தி, சிறு உரையாற்றினார். தம்மைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்ததற்கு, மன்னருக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“நிர்வாகக் கிளையின் தலைவராக, நான் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பரிவுடன் எனது கடமையைச் செய்வேன்,” என்று திருவாட்டி பேடோங்டார்ன் கூறினார்.

“நான் அனைத்துக் கருத்துகளையும் கேட்பேன். அப்போதுதான் ஒன்றிணைந்து நிலைத்தன்மையுடன் நம்மால் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்