பேங்காக்: தாய்லாந்து மன்னர் மகா வஜிரலொங்கோர்ன், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்தின் எட்டாண்டுச் சிறைத்தண்டனையை ஓராண்டாகக் குறைத்து அறிவித்துள்ளார்.
அரண்மனை அரசிதழில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“தக்சின் தம்முடைய குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்காக வருத்தம் தெரிவித்தார்,” என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 74 வயதான தக்சின் உடல்நலம் குன்றியிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
பெருஞ்செல்வந்தரான தக்சின், கடந்த 15 ஆண்டுகளாக நாட்டைவிட்டு வெளியில் இருந்தார்.
கடந்த வாரம் நாடு திரும்பிய அவர், பின்னர் தம் சிறைவாசத்தைத் தொடங்கினார்.
தாய்லாந்தின் செல்வாக்குமிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்த தக்சின், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் அவர் அறிவித்த எளிய மக்கள் சார்ந்த கொள்கைகள் தாய்லாந்து ஊரகப் பகுதி மக்களைப் பெரிதும் ஈர்ப்பதாக அமைந்தன.
இந்நிலையில், வியாழக்கிழமை தக்சின் அரச மன்னிப்பு கோரி, வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இதனையடுத்து, “தக்சின் பிரதமராக இருந்தவர்; நாட்டிற்கும் மக்களுக்கும் நற்பணிகளை ஆற்றியவர்; மன்னராட்சியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்தவர். அவர் நீதித்துறையை மதித்து, தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு, அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டு, நீதிமன்றத் தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டார். இப்போது, முதுமைப் பருவத்தில், உடல்நலம் குன்றியிருக்கும் அவருக்கு மருத்துவப் பராமரிப்பு தேவைப்படுகிறது,” என்று அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

