யானை தாக்கி பெண் மரணம்; யானைப் பாகன் மீது குற்றச்சாட்டு பதிவு

1 mins read
0a72d83c-47e7-4af5-934c-75211fd8f007
யானைகளுடன் குளத்தில் குளிக்கும் காட்சியில் பங்கேற்ற 23 வயதுப் பெண்ணை திடீர் என்று யானை தாக்கியது. - கோப்புப் படம்: த நேஷன்

பேங்காக்: தாய்லாந்தில் யானை தாக்கியதால் ஸ்பானிய சுற்றுப்பயணி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து யானைப் பாகன் மீது காவல்துறை வழக்குத் தொடுத்துள்ளது.

அந்த மரணச் சம்பவம் ஃபாங் இங்கா மாநிலத்தில் ஜனவரி 3ஆம் தேதி நிகழ்ந்தது.

ஸ்பெயினில் இருந்து சுற்றுப்பயணியாக வந்த 23 வயதுப் பெண், யானைகளின் சாகசக் காட்சியில் கலந்துகொண்டார்.

யானைகளுடன் சேர்ந்து சுற்றுப் பயணிகளும் குளத்தில் குளிக்கும் காட்சியில் பங்கேற்று இருந்தபோது ஃபாங் சோம்பூன் என்னும் 45 வயது பெண் யானை திடீர் என்று திடுக்கிட்டது.

பின்னர் அந்தப் பெண்ணை தனது துதிக்கையால் முட்டித் தள்ளியது. நிலைகுலைந்த பெண், குளக்கரை சிமிண்ட் விளிம்பில் விழுந்ததில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து யானையைச் சரிவரக் கையாளாமல் அலட்சியமாக நடந்துகொண்டதாக யானைப் பாகன் தீராயுத் இந்தாஃபுட்கிஜ், 38, என்பவர் மீது காவல்துறை குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை ஃபாங் இங்கா மாநில சுற்றுப்பயண, விளையாட்டு அலுவலகம் திங்கட்கிழமை (ஜனவரி 6) தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்