தாய்லாந்தில் 18 பயிற்சி அதிகாரிகள் மானபங்கம்: ராணுவம் விசாரணை

1 mins read
aa7185fc-f11b-486f-913e-d7ff5dbe3820
பிரசித்தி பெற்ற ஒரு ராணுவப் பள்ளியில் 18 ஆயுதப்படைப் பயிற்சி அதிகாரிகள் மானபங்கத்துக்கு ஆளானதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. - படம்: ஏஎஃப்பி

பேங்காக்: ஆயுதப்படைப் பயிற்சிக் கழகத்தைச் சேர்ந்த உடலியக்கச் சிகிச்சையாளர் ஒருவரால் 18 பயிற்சி அதிகாரிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அரச தாய்லாந்து ஆயுதப் படை விசாரித்து வருகிறது.

நாகோன் நாயோக் மாநிலத்திலுள்ள அந்தப் பிரசித்தி பெற்ற ராணுவப் பள்ளியில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சந்தேக நபரால் 18 ஆயுதப்படைப் பயிற்சி அதிகாரிகள் மானபங்கப்படுத்தப்பட்டதாக சமூக ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ள தற்காப்புப் படைத் தலைவர் ஜெனரல் சோங்விட் நூன்பாக்டீ, இன்னும் ஏழு நாள்களில் தகவல்களைத் தெரிவிக்க உத்தரவிட்டார்.

இதுவரை, 21 ராணுவ வீரர்கள் அதாவது பாதிக்கப்பட்ட 18 பயிற்சி அதிகாரிகளுடன் மூன்று சாட்சிகள் தங்களின் வாக்குமூலங்களைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

சந்தேக நபர் தவறான முறையில் தங்கள் உடலைத் தொட்டதாகப் பாதிக்கப்பட்ட 18 பேரும் கூறியுள்ளதாக அரச தாய்லாந்து ஆயுதப் படைப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வித்தாய் லாய்தொம்யா டிசம்பர் 20ஆம் தேதி தெரிவித்தார்.

விசாரணை முடியும்வரை சந்தேக நபர் தனது பணியிலிருந்து தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டதுடன் தலைமையகத்தில் வேறு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குற்றவாளி என்று நிரூபணமானால், சந்தேக நபர் மீது குற்றம் சாட்டப்படுவதுடன் ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அவரின் மேலதிகாரிகளும் அலட்சியப் போக்குக்காக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்நோக்கக்கூடும் என்றார் பேச்சாளர்.

குறிப்புச் சொற்கள்