பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சென்னிடம் பேசிய தொலைபேசி உரையாடல் ஒன்று சமூக ஊடகத்தில் கசிந்தது.
அந்த விவகாரத்தால் தாய்லாந்து மக்கள் கோபமடைந்தனர். இது ஷினவாத்துக்குப் பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
திருவாட்டி ஷினவாத்துடன் கூட்டணியில் இருந்த பும்ஜெய்தாய் கட்சி கூட்டணியிலிருந்து விலகுவதாகப் புதன்கிழமை (ஜூன் 18) அறிவித்தது. மேலும் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று அது கூறியது.
பிரதமரின் நடவடிக்கை நாட்டைக் காயப்படுத்தியது, ராணுவத்தின் மரியாதையைச் சேதப்படுத்தியது என்று அக்கட்சி கூறியது. இதனால் திருவாட்டி ஷினவாத்தின் ஆட்சிக்கு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வியாழக்கிழமை (ஜூன் 19) திருவாட்டி ஷினவாத் தாய்லாந்து மக்களிடம் மன்னிப்பு கோரினார். அவருடன் நாட்டின் ராணுவத் தளபதிகளும் பியூ தாய்க் கட்சியின் முக்கியத் தலைவர்களும் இருந்தனர்.
அண்மையில் கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுடன் திருவாட்டி ஷினவாத் இருநாட்டு எல்லை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகுறித்து பேசினார். உரையாடலின்போது திருவாட்டி ஷினவாத் திரு ஹுன் சென்னை ‘அங்கிள்’ என்று அழைத்தார். மேலும் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத் தளபதியைத் தனது எதிரியென ஷினவாத் குறிப்பிட்டார். இந்த உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
திரு ஹுன் சென் 2023ஆம் ஆண்டு கம்போடியாவின் பிரதமர் பதவியிலிருந்து விலகினாலும் அவரின் அரசியல் செல்வாக்கு கம்போடியாவில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவாட்டி ஷினவாத் பிரதமர் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என்று தாய்லாந்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
பும்ஜெய்தாய் கட்சியிடம் 69 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் தற்போது கூட்டணியிலிருந்து விலகியதால் நாடாளுமன்றத்தில் திருவாட்டி ஷினவாத் பெரும்பான்மையை உறுதி செய்வதில் தடுமாறலாம்.
மற்ற சில கூட்டணிக் கட்சிகளும் கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. கட்சிகள் விலக நேரிட்டால் திருவாட்டி ஷினவாத்தின் ஆட்சி முடிவுக்கு வரும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
ஏற்கெனவே நாட்டின் பொருளியலை நிலையாக வைக்க திருவாட்டி ஷினவாத் போராடி வருகிறார். அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்புக் கொள்கையும் தாய்லாந்துக்கு நெருக்கடி ஏற்படுத்திய நிலையில் இந்தத் தொலைபேசி உரையாடல் அவருக்குச் சிக்கலை அதிகரித்துள்ளது.