‘விலைமதிப்புமிக்க’ விருந்தாளியை வரவேற்ற பிரதமர்!

‘விலைமதிப்புமிக்க’ விருந்தாளியை வரவேற்ற பிரதமர்!

1 mins read
500,000 அமெரிக்க டாலருக்கு விலைபோன வெள்ளை எருமை!
7a4c9c52-8057-43da-9098-2f77a61fd784
‘கோ முவாங் பெட்’ வெள்ளை எருமையுடன் தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின். - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 3

பேங்காக்: தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் புதன்கிழமையன்று (மார்ச் 20) தமது அலுவலகத்திற்கு வந்த புதுமையான விருந்தாளியை வரவேற்றார்.

அண்மையில் 500,000 அமெரிக்க டாலருக்கு (S$670,000) விலைபோன ‘அல்பினோ’ வகை வெள்ளை எருமையே அவ்விருந்தாளி!

தாய்லாந்து வேளாண் வட்டாரங்களில் ‘கோ முவாங் பெட்’ என அழைக்கப்படும் இந்த நான்கு வயது எருமை ஆறடி உயரமும் 1.4 டன் எடையும் கொண்டது.

இதன் எடை, வழக்கமான எருமையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் புகழ்பெற்ற ‘சவுண்ட் ஃபிரம் தி ஃபீல்ட் ஆஃப் லவ்’ எனும் தொலைக்காட்சித் தொடரில் தலைகாட்டியதன்மூலம் ‘கோ முவாங் பெட்’ எருமை மக்களிடையே நன்கு அறிமுகமானது.

அரசு இல்லத்திற்கு வந்த அந்த எருமையைத் தொட்டுப் பார்த்து மகிழ்ந்த பிரதமர் தவிசின், “நம்மிடம் இவ்வளவு அழகான எருமை இருப்பது எனக்குத் தெரியாது,” என்று அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.

அரிதானவை என்பதால் ‘அல்பினோ’ எருமைகள் விலைமதிப்பு மிக்கவை.

இதனிடையே, ‘கோ முவாங் பெட்’டின் உரிமையாளரான ஜிந்தனாட் லிம்தொங்குல், அடுத்த மாதம் இடம்பெறவுள்ள தாய்லாந்துப் புத்தாண்டுத் (சொங்ரான்) திருவிழாவின்போது சுற்றுப்பயணிகள் கண்டு ரசிக்கும் வகையில், பேங்காக்கின் முக்கியப் பகுதிக்கு நான்கு பெரிய எருமைகளைக் கொண்டுவரவிருப்பதாக உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்