கோலாலம்பூர்: மலேசியக் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளிகளான ஸம்ரி வினோத், தமிம் தஹ்ரி ஆகிய இருவரையும் கைது செய்ய தாய்லாந்து காவல்துறை முழு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
அவர்கள் இருவரும் தாய்லாந்துக்குள் சட்டபூர்வமாக நுழைந்துள்ளதைத் தாய்லாந்து குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்திய நிலையில், அவர்களைத் தேடும் பணியைத் தாய்லாந்து காவல்துறை தொடங்கியிருப்பதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.
ஸம்ரி வினோத், தமிம் தஹ்ரி இருவரையும் தேடும் பணியை முடுக்கி விட்டிருப்பதாகவும் மலேசியக் காவல்துறையின் சிறப்புப் படை, தாய்லாந்து காவல்துறையுடன் இணைந்து தேடுதல் பணியை மேற்கொண்டு வருவதாகவும் எம். குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிராகத் தவறான கருத்துகளைத் தெரிவித்தது, பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டது, இழிவானச் செயல்களில் ஈடுபட்டது, தேசத்துரோகக் குற்றத்திற்காகவும் ஸம்ரி வினோத், தமிம் தஹ்ரி இருவர் மீதும் காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக எம். குமார் தெரிவித்தார்.
முன்னதாக லங்காவியில் உள்ள இந்துக் கோயில் வாசலில் வைக்கப்பட்டிருந்த திரிசூலத்தைக் காலால் மிதித்து அவமதித்த தமிம் தஹ்ரி என்பவரின் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து மலேசியா முழுவதும் பலரும் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதன் விளைவாக ஸம்ரி வினோத், தமிம் தஹ்ரி இருவரையும் காவல்துறை கைது செய்யவுள்ளது.

