தாய்லாந்து ஆகாயப்படை விமான விபத்து; விமானிகள் மரணம்

தாய்லாந்து ஆகாயப்படை விமான விபத்து; விமானிகள் மரணம்

2 mins read
296c375f-d454-46ed-a215-19f032a7b437
விபத்து பான் ஹுவாய் ஃபாங் கிராமத்தில் நிகழ்ந்தது. - படம்: Army Military Force / ஃபேஸ்புக்

பேங்காக்: தாய்லாந்து ஆகாயப்படை விமானம் ஒன்று சியாங்மாயில் உள்ள ஜோம் தோங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியதில் அதிலிருந்த விமானிகள் இருவரும் கொல்லப்பட்டனர்.

இரண்டு இருக்கைகள் உள்ள, குறைவான எடைகொண்ட ஏடி-6 வகை விமானம் விழுந்து நொறுங்கியதை தாய்லாந்து ஆகாயப்படை உறுதிப்படுத்தியது. விபத்து வியாழக்கிழமை (ஜனவரி 29) காலை 10.30 மணியளவில் பான் ஹுவாய் ஃபாங் கிராமத்தில் நிகழ்ந்ததாக தாய்லாந்து ஆகாயப்படை தெரிவித்தது.

சம்பவ இடத்தை ஆராய அதிகாரிகளை அப்பகுதிக்குத் தாங்கள் அனுப்புவதாகவும் அது கூறியது. ஆகக் கடைசி நிலவரப்படி ஆகாயப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தடைந்ததாக தெவாரிட் சொங்தாம் அறநிறுவனத்தைச் சேர்ந்த மீட்புப் பணியாளரான நட்டானொன் மெட்டுலா சொன்னார்.

ஆகக் கடைசி நிலவரப்படி மாண்டோரின் உடல்கள் சம்பவ இடத்திலிருந்து நகர்த்தப்படவில்லை. மாண்ட விமானிகளின் உடல்கள் விமானத்தில் சிக்கியிருந்ததாகவும் முழுமையான தேடல் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை காலை 10.48 மணிக்கு இந்த விபத்து குறித்து பேரிடர்த் தடுப்பு, தவிர்ப்பு தளபத்திய நிலைய மீட்புப் பணியாளர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது. மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடத்தைச் சென்றடைந்தபோது விமானம் சுமார் 20 மீட்டர் நீளம்கொண்ட பகுதியில் முழுமையாக எரிந்துகொண்டிருந்தது. வனப்பகுதியாக இருக்கும், விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியில் விபத்தால் கிட்டத்தட்ட 10 மீட்டர் ஆழம்கொண்ட குழி உருவானது. விமானச் சிதைவுகள் சிதறிக் கிடந்தாலும் பரவலாக சிதறவில்லை.

சம்பவ இடம் சாலையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிராமவாசிகள் பயன்படுத்தும் மலையேற்றப் பகுதிக்கு அருகே உள்ள மலைப் பகுதியின் மேல் நடந்துதான் விபத்து நிகழ்ந்த பகுதியைச் சென்றடைய முடியும்.

சம்பவத்தை நேரில் கண்ட ரட்டானாமொங்கோல் ஃபட்டனக்கியாட்சிவின் எனும் நபர், காய்கறிச் செடிகளுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தபோது விமானம் ஒன்று நெருங்குவதைக் கேட்டதாகச் சொன்னார். மேலே பார்த்தபோது அவ்விமானம் கீழ்நோக்கிச் சென்றதைப் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் இருந்தபோதும் இருமுறை வெடிப்புச் சத்தம் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்