பேங்காக்: வெளிநாட்டினர் தங்கள் மின்னிலக்க சொத்துகளை பாட் நாணயமாக மாற்றிக்கொள்ளும் வகையில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகளைத் தாய்லாந்து தளர்த்தவுள்ளது.
அதனால், வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் மின்னிலக்க நாணயத்தைப் பயன்படுத்தி செலவுசெய்யலாம். தாய்லாந்தின் சுற்றுலாத் துறைக்கு மெருகூட்டப் புத்தாக்க முயற்சிகளுக்கு ஊக்குவித்து மின்னிலக்க சொத்துப் பயன்பாட்டுக்கு ஆதரவளிக்க அந்நாட்டு அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது. அதேவேளை, கட்டணம் செலுத்த வெளிநாட்டவருக்கு நீக்குப்போக்கான தெரிவுகளை வழங்கவும் அரசாங்கம் விரும்புகிறது.
தாய்லாந்தின் நிதி அமைச்சர் பிச்சாய் சுன்ஹாவாஜிரா திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். இதற்கு வகைசெய்யும் ‘டூரிஸ்ட்டிஜிபே’ (TouristDigipay) எனும் திட்டம் 18 மாதங்களுக்கு இவ்வாண்டின் நான்காம் காலாண்டு முதல் சோதனையிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருள், சேவைகளுக்குப் பணம் செலுத்த மின்னிலக்க சொத்துகளை நேரடியாகப் பயன்படுத்த முடியாது. அவற்றை பாட் நாணயமாக மாற்றிக்கொள்ள மட்டும்தான் முடியும் என்று அதிகாரிகள் விவரித்தனர்.
“வெளிநாட்டு சுற்றுப்பயணிகள் தாய்லாந்தில் தங்கும் காலத்தில் அவர்களுக்குக் கைகொடுக்க எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க விரும்புகிறோம்,” என்றார் திரு பிச்சாய். “இந்தப் புதிய திட்டம் வருகையாளர்களின் ரொக்க, கடன் அட்டைப் பயன்பாட்டுக்குப் பதிலாக புத்தாக்க முயற்சி ஒன்றுக்கு வழிவிடுகிறது,” என்றும் அவர் விளக்கினார்.

