பேங்காக்: தாய்லாந்தும் கம்போடியாவும் சனிக்கிழமை (டிசம்பர் 27) அன்று உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
தாய்லாந்து நேரப்படி மதியம் 12 மணிமுதல் நடப்புக்கு வந்த இந்தச் சண்டை நிறுத்தத்தால் இரு நாடுகளுக்கும் இடையே நீடித்த மோதல்கள் முடிவுக்கு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
சிங்கப்பூர் நேரப்படி மதியம் 1 மணி முதல் நடப்புக்கு வந்துள்ள இந்த ஒப்பந்தம், பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பலாம் என்றும் கூறியுள்ளது.
வரவிருக்கும் புதிய ஆண்டில் அமைதியை நோக்கிப் பயணிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதால், நிம்மதி நிறைந்த நாள்களைக் காணலாம் என்று அந்நாட்டு மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்
இதற்கிடையே, நடப்புக்கு வந்துள்ள ஒப்பந்தம், போர்நிறுத்தம் 72 மணி நேரம் நீடித்தால், 18 கம்போடிய வீரர்களைத் தாய்லாந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கோரியது.
தென்கிழக்கு ஆசிய நட்பு நாடுகளான தாய்லாந்து, கம்போடியாவிற்கு இடையே மூன்று நாட்கள் நீடித்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அண்மைய போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இரு நாடுகளுக்கும் இடையே நெடுங்காலமாக நீடித்து வந்த எல்லைப் பூசல் டிசம்பர் மாதத்தில் மீண்டும் தீவிரமடைந்தது.
இதனால் ஏறத்தாழ 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். இந்த யுத்தத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
இரு நாடுகளின் அமைதியை குலைத்து வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட இந்த எல்லைப் பிரச்சினைக்குத் தாய்லாந்து கம்போடியா ஆகிய இருத்தரப்பும் ஒன்றையொன்று குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

