பேங்காக்: நாட்டு எல்லை குறித்த நீண்டநாள் சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளதை அடுத்து, தாய்லாந்து, கம்போடியா ஆகியவற்றின் அதிகாரிகள் சந்தித்து பதற்றத்தைத் தணிக்க முயன்று வருகின்றனர்.
சனிக்கிழமை நடந்துள்ள இந்தச் சந்திப்பின்வழி தாய்லாந்து அரசாங்கம் நிலவரத்தைச் சுமுகமாகத் தீர்க்க முயல்வதாக அந்நாட்டுப் பிரதமர் பெய்த்தொங்தார்ன் ஷினவாத் தெரிவித்தார்.
தாய்லாந்திற்கும் கம்போடியாவுக்கும் இடையே 820 கிலோமீட்டர் நீளமான எல்லை உள்ளது. அதில் பழங்காலக் கோயில்கள் கொண்டுள்ள பல்வேறு பகுதிகள், தெளிவாக வகுக்கப்படாத நிலையில் அவ்விரு நாடுகளுக்குள்ளே எல்லைப் பிரச்சினை பல்லாண்டுகளாக நிலவி வருகிறது.
மே 28ஆம் தேதி நடந்த சிறு மோதலில் கம்போடிய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் நான்கின் தொடர்பில் கம்போடியா, அனைத்துலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உறுதியாக உள்ளது. நீதிமன்றத்தில் இந்தச் சர்ச்சைகளுக்குத் தீர்ப்பை நாட தாய்லாந்து விரும்பவில்லை என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அந்த நான்கு பகுதிகள் குறித்து தமது நாடு விவாதிக்கத் தயாராக இல்லை என்று கம்போடிய பிரதமர் ஹுன் மானெட், வெள்ளிக்கிழமை (ஜூ 13) தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் அதிகாரத்துவ கடிதம் ஒன்றையும் அனுப்ப அனைத்துலக நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பப் போவதாகவும் அவர் கூறினார்.