பேங்காக்: தாய்லாந்துப் பிரதமரான அனுட்டின், ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்க தக்சின் ஆதரவு பெற்ற பியூ தாய் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளதாக நம்பப்படுகிறது.
பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனுட்டினின் பழைமைவாதக் கட்சி வெற்றி பெற்றது.
இதையடுத்து, ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ள அக்கட்சி, பியூ தாய் கட்சியை ஆளும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள விரும்புவதாகத் தெரிகிறது.
முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத் குடும்பத்தின் ஆசி பெற்ற பியூ தாய் கட்சி தேர்தலில் 3வது இடத்துக்கு வந்தது.
பியூ தாய் கட்சிக்கு அழைப்பு விடுக்கும் முடிவு, பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற பூம்ஜாய்தாய் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது இன்னமும் பொதுவாக அறிவிக்கப்படாததால் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு பிரமுகர் கூறினார்.
இந்நிலையில், பூம்ஜாய்தாய் கட்சியின் பேச்சாளரான திருவாட்டி பூந்திடா சோம்சாய், கூட்டணி பற்றி பேச்சு நடத்த திரு அனுட்டினுக்கு கட்சி அங்கீகாரம் வழங்கியிருப்பதாகச் சொன்னார்.
எந்தெந்தக் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும் என்பது குறித்து முடிவுசெய்யப்படவில்லை என்றார் அவர். இது குறித்து பியூ தாய் கட்சி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
திரு அனுட்டினின் கட்சி, 500 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் 193 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அவரது கட்சி, நான்கு ஆண்டுகள் முழு பதவிக்காலமும் நீடிக்க குறைந்தபட்சம் 280 உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
பியூ தாய் கட்சியின் 74 உறுப்பினர்கள், சிறிய கட்சிகளின் 30 உறுப்பினர்களோடு அனுட்டின் தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மை பெறுவதை உறுதிசெய்யும்.
வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 12) கூட்டணி அமைக்க தாம் அவசரப்படவில்லை என்றும் நாட்டின் நிதிநிலையைச் சீரமைக்க உதவும் ஒரு நிலையான அரசாங்கத்தை வழிநடத்துவதில் தமது கவனம் இருக்கிறது என்றும் திரு அனுட்டின் கூறியிருந்தார்.

