எல்லையில் தாய்லாந்து ஆக்கிரமிப்பு: கம்போடியா குற்றச்சாட்டு

2 mins read
1e440643-f617-459b-8c1a-06890b162f23
கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சொக்கொன் (வலது) . - படம்: ராய்ட்டர்ஸ்

நோம்பென்: தாய்லாந்து ராணுவம் எல்லையில் இன்னமும் பல பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகக் கம்போடிய வெளியுறவு அமைச்சர் பிராக் சொக்கொன் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 13) குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு இருமுறை ராணுவத் தாக்குதல் நடத்திய இருநாடுகளுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு நடப்பில் இருக்கும் வேளையில் கம்போடியாவின் துணைப் பிரதமருமான திரு பிராக்கின் கருத்து வெளிவந்துள்ளது.

கம்போடியப் பகுதிகளில் மக்கள் குடியிருந்த நான்கு இடங்களில் வேலிகளையும் கொள்கலன்களையும் வைத்து தாய்லாந்து ராணுவம் சண்டை நிறுத்த உடன்பாட்டையும் மீறி, ஆக்கிரமிப்பு செய்கிறது என்றார் அமைச்சர் பிராக் சொக்கொன்.

தாய்லாந்தின் நடவடிக்கையினால் ஏறத்தாழ 4,000 குடும்பங்கள் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் போனதாக அவர் குறிப்பிட்டார்.

“நிலைமை தற்போது அமைதியாக இருந்தாலும் இன்னமும் சில அபாயங்கள் உள்ளன. எனவே, தாய்லாந்து முழு சண்டை நிறுத்த உடன்பாட்டை மதித்து நடக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார் கம்போடிய அமைச்சர்.

ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த தாய்லாந்து ராணுவமும் அரசாங்க அதிகாரிகளும் கம்போடியாவின் குற்றச்சாட்டை அடிப்படையற்றது என்றது.

சண்டை நிறுத்த உடன்பாட்டின்படி வரையறுக்கப்பட்ட பகுதிகளிலேயே ராணுவம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை ஆக்கிரமிப்பாகக் கூற முடியாது என்றும் தாய்லாந்து தற்காப்பு அமைச்சு கூறியது.

ஆயுதங்கள், போர் விமானங்கள் போன்றவற்றை பயன்படுத்தி, இரு அண்டை நாடுகளும் டிசம்பர் மாதத்தில் சண்டையிட்டன. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சமரச அழைப்பை ஏற்று, சண்டை நிறுத்தத்திற்கு உடன்பட்டன.

சண்டையின்போது இரு நாடுகளிலும் 101பேர் உயிரிழந்தனர்; அரை மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீடுகளிலிருந்து இடம்பெயர நேர்ந்தது.

அண்மைய வாரங்களாக இருநாட்டு எல்லை ஆணையம் சந்திப்புக் கூட்டம் நடத்தவேண்டும் என்று கம்போடியா கேட்டும் தாய்லாந்து ஒப்புதல் வழங்கவில்லை என்றார் அமைச்சர்.

குறிப்புச் சொற்கள்